உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா மகா தரிசனம்: பக்தர்கள் அதிருப்தி!

சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா மகா தரிசனம்: பக்தர்கள் அதிருப்தி!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தில் நடனமாடி வந்த நடராஜ சுவாமி மகா தரிசனத்தை பல்லாயிரகனக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று முன்தினம் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி அம்பாள் பகல் 12:00 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளினார். அங்கு மண்டகபடிதாரர்களின் தீபாராதனைக்குப் பின் நடை சாத்தப்பட்டது. மாலை 7:00 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் ஆயிரங்கால் உள் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி, திருவாபரண அலங்கார ஊஞ்சல், பிற்பகல் 1:45 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 2:45 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மாலை 4:45 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர், முன் மண்டபத்தில் ஆனந்த நடனமாடி வரும் ஆருத்ரா மகா தரிசனம் கண்கொள்ளாக் காட்சி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் "சிரசுக்கு மேல் கை கூப்பி வணங்கி கைகளை தட்டி ஓசைகள் எழுப்பியும், "தில்லை அம்பலத்தானே, ஆடல் வல்லானே என கோஷம் எழுப்பி ஆனந்த நடனமாடி சுவாமி தரிசனம் செய்தனர். நடராஜர் 21 படி வாசல் வழியாக ஞானகாச சித்சபைக்கு பிரவேசித்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளை தீட்சிதர்கள் செய்தனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு கால தாமதமானதால், நேற்று முன்தினம் இரவு முதல் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் பசி தாங்க முடியாமல் மயக்கம் ஏற்பட்டு, 2:30 மணிக்கு கோவிலை விட்டு வெளியேறினர். தரிசன உற்சவத்தில் எஸ்.பி., ராதிகா தலைமையில், டி.எஸ்.பி., ராஜாராம், இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், உதயக்குமார் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !