மேல்மருவத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்பு!
மதுராந்தகம்: மேல்மருவத்தூரில், சாலை ஓரம் புதைக்கப்பட்டிருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஐம்பொன் சிலைகளை, போலீசார் நேற்று மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்துள்ள, சோத்துப்பாக்கம் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை அருகே, குப்பை கொட்டும் இடத்தில், ஐம்பொன் சிலைகள் புதைக்கப்பட்டு உள்ளதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. நேற்று அதிகாலை முதல், போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விநாயகர், வள்ளி, தெய்வயானை சிலை தலா ஒவ்வொன்றும், சிவகாமியம்மன் சிலைகள் இரண்டும் என, ஐந்து சிலைகளை போலீசார் மீட்டு, எஸ்.பி., விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, எஸ்.பி., விஜயகுமார் கூறும்போது: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தனியார் கோவில்களில் இருந்து, ஏழு ஐம்பொன் சிலைகள், கடந்தாண்டு திருடு போயின. இவற்றில், ஒரு சில சிலைகள் மட்டும், மீட்கப்பட்டன. இந்நிலையில், மேல்மருத்துவத்தூர் அருகே, போலீசாரால் மீட்கப்பட்ட, ஐந்து ஐம்பொன் சிலைகளை, யார் புதைத்து வைத்தனர் என்பது குறித்து, விசாரித்து வருகிறோம். ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுக்குன்றம் கோவில் நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு, இந்த சிலைகள், அந்தந்த கோவில்களுக்குரியனவா எனக் கேட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்படும்," என்றார்.