ரசிகர்களை உற்சாகப்படுத்திய அஸ்வத் நாராயணன்!
ராக சுதா அரங்கில் நாத இன்பம் சார்பில் நடந்த கச்சேரியை, அஸ்வத் நாராயணன் வனஜாட்சி எனும் கல்யாணி ராக, அட தாள வர்ணத்தில் துவங்கினார். மேற்காலத்தில், எழுபதுகளில் கே.வி.என்., கச்சேரிகளில் கேட்ட அதே விறுவிறுப்பு. பளிச்சென்று பேகடா வெளிப்படும் சஞ்சாரத்துடன் துவங்கி அடுத்ததாய், வல்லப நாயகஸ்ய என்னும் தீட்சிதரின் ரூபகதாள கிருதியை பாடினார். சிறு ஆவர்த்தனங்களில் ஸ்வரங்களை வழங்கினார்.
இசையின் முதுமை: அடுத்ததாக வராளி ராகம் ஆலாபனை. அகாரங்களுடன் நீள்வாக்கியமாய் ஸ்வரங்களை கோர்க்கும் வகையிலான ஆலாபனை, அஸ்வத் குரலின் தேர்ச்சியையும், இசையின் முதுமையையும் வெளிப்படுத்தியது. தொடர்ந்து, ஆழி மழைக் கண்ணா என்று அரியக்குடியார், வராளியில் இசைவடிவம் கொடுத்த திருப்பாவையை பாடினார். தாள பக்கவாத்தியங்கள், உற்சாகமான சர்வலகு வாசிப்பில் எழுச்சியூட்டினர். நாங்களும் வாழ உலகினில் பெய்திடாய் எனும் வரியில் நிரவல் செய்தார். மேற்காலத்தில் நிரப்புகையில், மேடையின் உற்சாகம் ரசிகர்களையும் தொட்டது. ஸ்வரங்கள் பாடி நீண்ட கோர்வையை வைத்து, இந்த உருப்படியை முடித்தார். வயலினில், சிதம்பரம் பத்ரிநாத் கற்பூர அறிவாய் கோர்வையை அப்படியே வாங்கி வாசித்தது சிறப்பு. கச்சேரியில் கும்பகோணம் ராமகிருஷ்ணன் மிருதங்கம் மற்றும் உடுப்பி ஸ்ரீகாந்த் கஞ்சிராவின் நாதமும் வாசிப்பும் அருமை.
அரியக்குடியாரின் சாயல்: ஹிந்தோள ராகத்தில் சுருக்கமாய் ஆலாபனை செய்து, முடிவில் தமிழில் ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே எனும் அருணாசல கவியின் ராமநாடக கிருதியை பாடினார். ராமனுக்கு முடிசூட்டுவதில் தனக்கிருந்த மகிழ்ச்சியை, கைகேயி கூனியிடம் தெரிவிப்பதாக வரும் சுவையான கட்டம். அடாணாவில், காருண்ய ரசத்துடனான சிறு ஆலாபனைக்கு பிறகு அனுபம குணாம்புதி என, தியாகையரின் கிருதியில், சங்கதிகளுடன் புறப்பட்ட வேகத்தில் அரியக்குடியாரின் நிழலாடியது. மிருதங்கமும் சளைக்காமல், பாலக்காடு மணி ஐயர் இந்த கிருதிக்கு வாசித்ததன் மேன்மையை தொப்பியிலேயே நினைவுறுத்தினார். மேற்கால ஸ்வரங்கள் சிறப்பாய் அமைந்தன. அடுத்ததாக சாவேரி ஆலாபனை. நிதானமாக வளர்த்தெடுக்கையில் படைப்பூக்கத்தை பாங்காய் வெளிப்படுத்தினார். வயலின் மதுரமான வில்வித்தையில் தேர்ச்சியுடன் பாடகரின் தன்மையை ஒத்து ஆலாபனையை வழங்கியது நன்று. சாவேரியில் பிரதான தமிழ்கிருதியாய் முருகா முருகா என்றால் உருகாதோ எனும் பெரியசாமி தூரன் இயற்றி, டி.கே. கோவிந்தராவ் இசைவடிவம் கொடுத்ததை வழங்கினார். தொடர்ச்சியாக செந்தில் மாநகர் வாழும் தேவாதிதேவனே என்னும் வரியில் நிரவல் செய்தார். ஸ்வரங்கள் முடித்து தனி ஆவர்த்தனம் விட்டார். துக்கடாவில் ஜெயஜெய வந்தே மாதரம் என்று யமுனா கல்யாணியில் துவங்கி பிருந்தாவனி, புன்னாகவராளி, சிந்துபைரவி ஆகியவற்றில் ராகமாலிகையாய் பாடினார். செஞ்சுருட்டியில் கலியுகதல்லி எனும் புரந்தரதாசர் கிருதியை பாடி முடித்துக்கொண்டார்.
வாழ்த்தலாம்: அஸ்வத் நாராயணனுக்கு இளவயதில் மரபிசையின் வலுவான பாடாந்திரம் அமைந்துள்ளது. கணீரென்ற குரலை வருத்தாமல், ஜிகினாக்கள் இல்லாத இசையை, நிறைந்த அரங்கில் வழங்கும் மனோதிடம் உள்ளது. அனைத்து உருப்படிகளிலும் ராக ஆலாபனை சிறிதேனும் செய்வதற்கு அவகாசம் உள்ளது. அவருக்கு உரிய இடத்தை வர்த்தக சபைகளிலும் விரைவில் அடைய வாழ்த்துவோம்.
வனஜாட்சி இயற்றியது யார்?: மரபிசையில் இன்றும் பாலபாடமாய் கற்கும் வனஜாட்சி எனும் பிரபலமான கல்யாணி ராக வர்ணம், பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார் இயற்றியது என்பது தவறு. அதை இயற்றியவர் நாகஸ்வரக் கலைஞர் நாகப்பட்டினம் வேணுகோபால பிள்ளை. நேற்று, மிருதங்கம் செய்யும் கலைஞர் செல்வத்தை, பரிவாதினி அமைப்பினர் கவுரவித்து பாராட்டுவிழா நடத்தினர். அதன் முடிவில், உரை மற்றும் விளக்கத்தில், இசை ஆய்வாளர் முனைவர் பி.எம். சுந்தரம் இந்த தகவலை பகிர்ந்துகொண்டார். அருண் நரசிம்மன்