காரைக்கால் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மாதா கோவில் வீதியில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. அதைத் தொடர்ந்து, நள்ளிரவு 12.00 மணிக்கு தேவாலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி தத்ரூபமாக இடம் பெற்றது. பங்குத் தந்தை அந்தோணி லூர்துராஜ் அடிகளார் குழந்தை ஏசுவின் சொரூபத்தை ஏந்தி வந்து, குடிலில் வைத்தார். அப்போது, சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், காமராஜர் சாலையில் உள்ள அந்தோணியர் ஆலயம், தருமபுரத்தில் உள்ள செபஸ்தியர் ஆலயம், கோட்டுச்சேரி, குரும்பகரம், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள் நடந்தன.