குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ!
ஒரு சமயம்,காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். வரிசையில் நின்ற தம்பதி ஒரு தட்டில் பூ, பழம், கல்கண்டு கொடுத்து அவரை வணங்கினர். திருமணமாகி ஏழு ஆண்டாகியும் குழந்தைப் பேறு இல்லாததைச் சொல்லி வருந்தினர். பெரியவர், ஒரு கணம் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்து, எத்தனை வருஷமா கோணல் வகிடு எடுத்து தலைவாருகிறாய்? என்று கேட்டார். அந்த பெண்ணோ, நினைவு தெரிந்த நாளாக இப்படியே தலை சீவுவதாக தெரிவித்தாள். இன்று முதல் நேர் வகிடு எடுத்துக்கோ! அப்படியே தலை வாரி, அதில் குங்குமம் இட்டுக் கொள். சவுந்தர்ய லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் இரண்டு மாதம் படித்து வா என்று சொல்லி ஆசியளித்தார். பெரியவர் கூறியபடியே அந்த பெண்ணும் செய்து வந்தாள். பெரியவரிடம் ஆசி பெற்று சென்ற, 51வது நாளில், மருத்துவரிடம் சோதித்தபோது, அவள் தாய்மை அடைந்தது உறுதியானது. பெண்குழந்தை பிறந்தது. குழந்தையை மடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் ஆசி பெற்றனர். அவர்களிடம் பெரியவர், உங்கள் குல தெய்வம் எது? என கேட்டார். அவர்கள், திருவாச்சூர் மதுரகாளியம்மன் என்றனர். பெரியவர் குழந்தைக்கு மதுராம்பாள் என்று பெயரிட்டு ஆசியளித்தார். அந்த தம்பதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.