உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவ தலங்களில் 61 வகை தல விருட்சம் வைத்து பராமரிக்க...ஏற்பாடு!

சைவ தலங்களில் 61 வகை தல விருட்சம் வைத்து பராமரிக்க...ஏற்பாடு!

சிதம்பரம்: சைவ தலங்களில் முதன்மையாக திகழும் சிதம்பரத்தில் கோவில் தல விருட்சமான 61 வகையான மரங்கள் வைத்து வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் சைவ திருத்தலங்களில் முதன்மையானதாக திகழ்கிறது. ஒவ்வொரு சைவ திருத்தலங்களுக்கும் தல விருட்சம் எனப்படும் மரம் உண்டு. இந்த தல விருட்சங்களை வைத்து சைவ கோவில் எந்தப் பகுதியில் உள்ளது. யாரால் உருவாக்கப்பட்டது என்ற கோவில் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியும். தில்லை வனமான சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தல விருட்சம் ""தில்லை என்ற ஒரு வகை மரம். இந்தப் பகுதியில் தில்லை மரம் காலப்போக்கில் அழிந்துவிட்டது. சைவ திருக்கோவில் தல விருட்சங்களாக இந்தியாவில் 61 தல விருட்சங்கள் உள்ளன. இதனை சைவ திருத்தலங் களில் முதன்மையாக திகழும் சிதம்பரத்தில் 61 வகையான தல விருட்சங்களை வைத்து வளர்த்து பராமரிக்க ஆன்மீக சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். சிதம்பரம் நகர மன்றத் தலைவர் நிர்மலா சுந்தர், பொறுப்பு கமிஷனர் செல்வராஜ் ஆகியோரின் அனுமதி பெற்று நகராட்சி யானை மேட்டுக் குளக்கரையில் 2 ஏக்கர் பரப்பில் 61 வகை தல விருட்சம் வைக்கப்படுகிறது. அதனால் குளக்கரை பக்கத்தில் உள்ள காலி இடத்தை தொழி லதிபர் ஆன்மீகவாதி மணி தானமாக வழங்கியுள்ளார். இந்த இடத்தில் பொக்லைன் மூலம் சமப்படுத்தி, முள் வேலி அமைக்கப்படுகிறது. இதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 61 வகையான மரக்கன்றுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. யானை மேட்டுக்குளத்தில் வாஸ்துப்படி 61 வகை தல விருட்ச மரக்கன்றுகள் வைக்க முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் சேதுசுப்ரமணியன், இன்ஜினியர் ரவிச்சந்திரன், ஆன்மீக ஆர்வலர் செங்குட்டுவன், தொழிலதிபர் முத்துகுமரேசன், கவுன்சிலர் திருவரசு ஆகியோர் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !