ஐயப்பன் தங்க அங்கி பெட்டியை சுமந்த பட்டிவீரன்பட்டி பக்தர்!
பட்டிவீரன்பட்டி: தமிழக ஐயப்ப சேவா சங்கத்தினர், சபரிமலைக்கு வரும் பக்தர்கள், உடல் நலம் பாதிக்கபடும்போது முதலுதவி செய்தல், நெரிசலில் சிக்குபவர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களின் சேவையை பாராட்டி, அதற்கு நன்றி செலுத்தும் வகையில், ஐயப்பனின் விக்ரகத்திற்கு அணிவிக்கப்படும் தங்க அங்கிப் பெட்டியை, பம்பையில் இருந்து சன்னிதானம் வரை சுமந்து செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு மண்டல பூஜையில் சிறப்பாக பணிபுரிந்த திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி ராமையா, மதுரை பரமசிவம், புதுச்சேரி நாகராஜ், ஊட்டி வாசுதேவன் ஆகியோர், தங்க அங்கி பெட்டியை சுமக்க, தேர்வு செய்யப்பட்டனர். தங்க அங்கிப் பெட்டியை, 18 படிகளில் சுமந்து சென்ற திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர், ராமையா கூறுகையில்,""பக்தர்களுக்கு சேவை செய்வது ஐயப்பனுக்கு சேவை செய்வது போன்றது. தங்க அங்கிப் பெட்டி சுமக்கும் பாக்கியம் கிடைத்ததன் மூலம், தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது, என்றார்.