உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கோயிலில் புத்தாண்டு பூஜைக்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு!

திருச்செந்தூர் கோயிலில் புத்தாண்டு பூஜைக்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு!

மதுரை: புத்தாண்டையொட்டி, ஆகம விதிகளுக்கு முரணாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கருவறை பூஜை செய்ய, தடை விதிக்கக்கோரி தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது. சாத்தான்குளம், பண்ணைவிளையை சேர்ந்த சுந்தரவேல் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தினமும் காலை 5.10 முதல் இரவு 9 மணி வரை 14 வகை பூஜைகள் நடக்கின்றன. வேதம், ஆகம விதிப்படி இரவு 1:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை எந்த பூஜையும் செய்யக் கூடாது. விழாக் காலங்களில், சுவாமி அலங்காரத்திற்காக, கருவறை கதவை முன்கூட்டியே திறக்கலாம். ஆங்கில புத்தாண்டையொட்டி (2014) ஜன.,1 இரவு 12:00 மணிக்கு கர்ப்பகிரகத்தை திறந்து, கருவறை பூஜை செய்ய, இணை கமிஷனர் ஏற்பாடு செய்துள்ளார். ஆங்கில புத்தாண்டு பிறப்பு, இந்துக்களின் விழா அல்ல. குமார தந்திர வழிபாட்டு முறை மற்றும் உப ஆகம விதிகள்படி பூஜைகளை, சூரிய உதயத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பகிரக கதவை 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன் தான், திறக்க வேண்டும். எனவே, புத்தாண்டிற்கு இரவு 12:00 மணிக்கு கருவறை பூஜை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், என மனுவில் குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.மகாதேவன் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.பாலகிருஷ்ணன் ஆஜரானார். விசாரணையை, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !