சபரிமலை மகரஜோதி: 1000 பஸ்கள் இயக்கம்: கேரள அரசு ஏற்பாடு!
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அப்பமும், அரவணையும் அதிகளவில் தயாரித்து இருப்பு வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக 13 லட்சம் சிறிய பெட்டிகளில் அரவணையும், இரண்டு லட்சம் கவர்களில் அப்பமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெரிசல் ஏற்படாத வகையில் சேதமடைந்து காணப்படும் "தடுப்பு வேலிகள் சீரமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாண்டித்தாவளம் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் இருந்து, குடிநீர் வினியோகம் நேற்று முன்தினம் துவங்கியது. நிலக்கல்-பம்பை இடையே 120 பஸ்களை கேரள அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. "மகரஜோதி தரிசனம் முடித்து திரும்பிச்செல்லும், தமிழக, கர்நாடக மாநில பக்தர்கள் மற்றும் கேரள பக்தர்கள் சிரமம் இன்றி வீடு திரும்ப உதவும் வகையில், ஆயிரம் பஸ்கள் இயக்கப்படும், என கேரளா மாநில அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை சன்னிதானம் செல்லும் வழி நெடுகிலும் கூடுதலாக 550 டியூப் லைட்கள் அமைக்கப்படும், என தேவஸ்தானம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.