வேதநாராயண பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்
தொட்டியம்: திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான, வேதநாராயணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று துவங்கியது. பெருமாள் நரசிங்க உருவமெடுத்து அசுரன் இரணியனை வதம் செய்த பின், கோபம் தீராத எம்பெருமாளை பிரகலாதன் சாந்தமான உருவத்தில் காட்சியளிக்க வேண்டிக் கொண்டார். பிரகாதனின் வேண்டுகோளை ஏற்று, பெருமாள் கோபம் தணிந்து திருநாராயணபுரத்தில் வேதநாராயணன் என்ற பெயருடன் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி, பள்ளி கொண்ட திருக்கோலத்தில் காட்சி அளித்தார். இதனால் இத்தலம் சதுர்வேதி மங்கலம், வேதபுரி, ஆதிரங்கம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, தற்போது திருநாராயணபுரம் என்ற பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மேலும், நான்கு வேதங்களையும் தலையணையாக கொண்டு பிரம்மாவுக்கு, வேத உபதேசம் செய்த திருத்தலமாகும். இதனால் இக்கோவில் பிரகலாத ஷேத்திரம் என்ற பெயர் பெற்றதாக புராணங்களில் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள வைணவ கோவில்களில் புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவிலில் கம்பத்தடியில் அமர்ந்துள்ள அனுமன் வேண்டுவோருக்கு, வேண்டிய வரம் அளிப்பவராகவும் காட்சியளிக்கிறார். பிரகலாதனுக்கு அருள் புரிந்தவராகவும், அடியார் அரையருக்கு மோட்சம் அளித்ததாலும், வேதனை தீர்க்கின்ற நாயகனாகவும் விளங்குகிறார். இத்திருத்தலத்தை வழிபடுவோருக்கு நல்ல கல்வி அமைதல், துன்பங்கள் நீங்குதல், தீ விபத்து மற்றும் தீக்காயம் குணமாதல், பெண்கள் திருமண தடை நீக்கவும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து என, 21 நாட்கள் நடக்கும் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆழ்வார்கள் தினமும் பாசுரங்கள் பாடி செல்ல, எம்பெருமாளின் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வருகிறது. பகல்பத்தில் நிறைவு நாளான வரும், 10ம் தேதி எம்பெருமான மோகனாவதாரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளிப்பார். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக எம்பெருமாள் வரும், 11ம் தேதி காலை ஐந்து மணிக்கு சொர்க்கவாசல் வழியாக ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதைத் தொடர்ந்து ராப்பத்து விழா நடக்கும்.