உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப பக்தர்களே குரு சொல் கேளுங்க!

ஐயப்ப பக்தர்களே குரு சொல் கேளுங்க!

இப்போது, பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.  பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 20 பேர், மகா பெரியவரைச் சந்தித்தனர். தாங்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் முன், மகா பெரியவரிடம் ஆசி பெற வந்ததாகத் தெரிவித்தனர். பெரியவரும் அவர்களை ஆசிர்வதித்தார். நீங்கள் நேராக சபரிமலை போக வேண்டாம். மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர் முருகன், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன், குருவாயூரப்பன் கோயில்களுக்கு போய்விட்டு, நமது ஆச்சாரியார், ஆதிசங்கரர் அவதரித்த காலடி சென்று, ஆச்சாரியாரையும், கிருஷ்ணரையும் வழிபடுங்கள். பிறகு, சபரிமலைக்குச் செல்லுங்கள், என்றார். அவர்களும் சரியென ஒப்புக் கொண்டு வந்துவிட்டனர். சபரிமலை யாத்திரைக்கு தயாரானபோது, அவர்களில் எட்டு பேர் மட்டும், பெரியவர் சொன்ன மாதிரி மற்ற தலங்களுக்கெல்லாம் போக வேண்டும் என்று கட்டாயமா என்ன! அதற்கு நாட்கள் அதிகமாகுமே! எங்களுக்கு வசதிப்படாது. சபரிமலைக்கு நேராகப் போகிறோம், என்று சொல்லி கிளம்பி விட்டனர். மற்ற 12 பேரும், பெரியவரின்  உத்தரவுபடி தங்கள் பயணத்திட்டத்தை வகுத்து கொண்டனர். யாத்திரை முடிவடைந்தது. பெரியவர் உத்தரவுப்படி நடந்தவர்கள், ஊர் வந்து சேர்ந்தனர். மற்ற எட்டு பேரும் சபரிமலைக்கு மட்டுமே போய்விட்டு திரும்பவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தேட ஆரம்பித்தனர். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து தான், அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளாகி, ஆஸ்பத்திரியில் இருப்பது தெரிய வந்தது. காயங்கள் குணமாகி, ஊர் திரும்பவே பத்து நாட்கள் ஆகி விட்டது.  வந்தவுடன், அவர்கள் பெரியவரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டனர். பெரியவர் அவர்களிடம், உங்களுக்கென ஒரு குரு இருப்பார். ஆனால், என்னை ஒரு குருவாக மதித்து, என்னிடம் ஆலோசனை கேட்டதால் தான், நான் உங்களை அவ்வாறு சென்று வரும்படி சொன்னேன். நீங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்ததே ஆனந்தம் தான், என்றார். பின்னால், நடப்பவற்றை முன்கூட்டியே அறிவிக்கும் தீர்க்கதரிசியாக விளங்கினார் மகா பெரியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !