உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யாரை விரும்புகிறார் ஏழுமலையான்?

யாரை விரும்புகிறார் ஏழுமலையான்?

திருப்பதி வெங்கடாஜலபதி எப்படிப்பட்ட பக்தரை விரும்புகிறார்? கோயிலின் பிரதான அர்ச்சகரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதைக் கேட்போமே! ஏழுமலையானை நிம்மதியாக பார்க்க முடியவில்லை என பக்தர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். 1950ல், நீங்கள் திருப்பதி வந்திருந்தால், பத்து நிமிடம் நின்றால் கூட உங்களை போகச்சொல்ல ஆள் கிடையாது. ஆனால் இப்போது நிலமை அப்படியில்லையே. சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூட, 2 நிமிடம் கூட சுவாமி முன் நின்று பிரார்த்தனை செய்திருக்கமாட்டார். அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று விட்டனர். ஆக, சுவாமியை ஒரு நிமிடம் கூட பார்க்கவில்லையே என்று நினைக்காதீர்கள், மாறாக, பத்து வினாடியாவது பார்த்தேனே என்று திருப்தி அடைந்து கொள்ளுங்கள். பக்தி என்பது, நாமம் இட்டு, மந்திரம் சொல்லி, பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்துவிடுவதில்லை. அப்போதுதான் துவங்குகிறது. நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு மனம்,மெய்,வாக்கு ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தி. எனக்கு எஜமான் பெருமாள்தான். எங்கேயோ இருந்த என்னை தனக்கு பூஜை செய்யும்படி அருகில் அழைத்து வைத்துக்கொண்டு உள்ளார். மனம்விரும்பி, அவருக்கு என் வேலையை செய்யும் போது ஏற்படும் பரவசம் பக்திக்குஈடானது. யாராக இருந்தாலும் மனம் சொன்னதை கேட்டு வேலையை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், அந்த தொழில் பக்தியைதான் பெருமாள் மிகவும் நேசிப்பார். காலுக்கு செருப்பு கூட வாங்க முடியவில்லையே என்று கவலைப் படுபவன் காலை இல்லாதவனை பார்த்தபிறகு நமது கவலையில் நியாயமில்லை என்பதை உணர்வான். அது போல எல்லோருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப கஷ்ட, நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். இதையே நினைத்துக்கொண்டு இருக்காமல், அதை கடந்து போகும் வழியை பார்க்கவேண்டும். உன்னிடம் அதிகாரம் இருந்தால் அதை நல்ல விஷயத்திற்கு பயன் படுத்தாமல் இருப்பதும் குற்றம். அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு தப்பான விஷயம் நடக்கும் போது அதை பார்த்துக்கொண்டு தடுத்து நிறுத்தாமல் விட்டாலும் பாவம். முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆரிடம், ஆந்திராவிலுள்ள 34 ஆயிரம் கோயில்களைச் சேர்ந்த ஒரு லட்சம் அர்ச்சகர் குடும்பங்கள் நலம் பெற ஒரே ஒரு உத்தரவு போடுங்கள் என்று கேட்டேன். அப்படியே உத்தரவிட்டார். இன்று அந்த ஒரு லட்சம் குடும்பமும் நிரந்தர வருமானத்துடன் நிம்மதியாக இருக்கிறது. ஆக, பக்தியும் நிம்மதியும் ஆனந்தமும் குலசேகரபடிக்கட்டைத் தாண்டி கர்ப்பக்கிரகத்தில் மட்டும் இல்லை, உங்கள் மனதிலும் இருக்கிறது. வாழ்க்கையை நேசியுங்கள். அது எப்படி இருந்தாலும், அமைந்தாலும்ஒத்துக் கொண்டு வாழப் பழகுங்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? அன்றாடம் தன்னை வந்து சந்திக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வீடு வேண்டும், பணம் வேண்டும், வெளிநாட்டு வேலை வேண்டும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான வேண்டும் வேண்டுதலை மட்டுமே கேட்கும் பெருமாள், கோடியில் ஒரு பக்தன், எனக்கு எதுவும் வேண்டாம். நீதான் வேண்டும், நீ மட்டுமே வேண்டும், என்று கேட்டுவரமாட்டாரா? அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக்கொள்வோமே என எண்ணியுள்ளார். அந்த ஒரு பக்தராக மனதார மாறமுடியுமா? பாருங்களேன்!.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !