அடித்தால் கை வலிக்குமே!
ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி, தன் குருவாக, விரஜானந்தரை ஏற்றிருந்தார். விரஜானந்தருக்கு பார்வை இல்லாததால், சீடரான தயானந்தரே பணிவிடை செய்து வந்தார். விரஜானந்தர் தினமும் யமுனை நதியில் நீராட விரும்புவார். ஆனால், அவரால் நதிக்கரை வரை சென்று வருவது சிரமமானதாக இருந்தது. எனவே, யமுனை நீரை 12 குடம் எடுத்து வந்து, குருவை குளிப்பாட்டுவார் தயானந்தர். மேலும்,குரு தங்கும் இடத்தை சுத்தப்படுத்தவும் செய்வார். ஒருநாள், அவரைக் குளிப்பாட்டி விட்டு, வீட்டை சுத்தம் செய்தார். ஆனால், ஒரு பக்கத்தில் இருந்த குப்பையை கவனிக்காமல் விட்டு விட்டார். பார்க்கும் சக்தி இல்லாத விரஜானந்தரின் கால், குப்பை மீது இடறி விட்டது. கோபம் தலைக்கேறியது. தயானந்தரின் முதுகில் பளார்..பளார்.. என முடிந்த மட்டும் அறைந்தார். குருவே! தயவு செய்து முதுகில் என்னை அடிக்காதீர்கள்! எனக்கு வலிக்கும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. எத்தனையோ முறை உங்களிடம் அடி வாங்கியதால் என் முதுகு மரத்துப் போய்விட்டது. ஆனால், என்னை அடிக்கும் போது, தங்களின் கைகள் இரண்டும் வலிக்குமே! என்று சொல்லி வருந்தினார். தயானந்தரின் குருபக்தி கண்ட விரஜானந்தர், இதற்குப் பின் சீடரை அடிப்பதை விட்டுவிட்டார்.