லட்சுமி நரசிம்மர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
கண்டமங்கலம்:பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மபெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் நேற்று முன் தினம் காலை சுவாமிகளுக்கு புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவிலுள்ள, கோட்டை விநாயகர் கோவிலில் நேற்று முன் தினம் புத்தாண்டை முன்னிட்டு காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் வெள்ளி கவசத்தில், விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பூஜை ஏற்பாடுகளை சுந்தரம் குருக்கள் செய்திருந்தார். விழுப்புரம் வண்டிமேடு, தேவி நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 31ம் தேதி இரவு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன் தினம் காலை 7 மணிக்கு விநாய கருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆலய நிர்வாகி நிர்மலா அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் ரயிலடி வழித்துணை ராஜவிநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. அர்ச்சகர் சந்திரசேகரன் பூஜைகளை செய்தார். விழா ஏற்பாடுகளை ரயில்வே எஸ்.ஆர்.எம்.யூ., கோட்ட செயலாளர் பழனிவேல், டிக்கெட் பரிசோதகர் முத்துராமலிங்கம் குழுவினர் செய்திருந்தனர். அரசமங்கலம் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. பூஜைகளை வெங்கடேஷ்பாபு பட்டாச்சாரியார், கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார் செய்தனர்.