திருமலை கோவிலில் பார்லி., குழு பார்வை
திருப்பதி: திருமலை தேவஸ்தானத்தின் சேவை, வியக்க வைப்பதாக, பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்தது. திருமலைக்கு, ராஜ்யசபா, எம்.பி., சுப்பிராமி ரெட்டி தலைமையில், 30 எம்.பி.,க்கள் கொண்ட, பார்லிமென்ட் நிலைக்குழு, நேற்று முன்தினம் இரவு வந்தது. நேற்று காலை, வி.ஐ.பி., பிரேக் மூலம், ஏழுமலையானை தரிசித்த குழுவினர், திருமலையில் உள்ள அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் கூறியதாவது: தினமும், 54 ஆயிரம் பேர் உணவருந்தும் இவ்விடம், தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. தேவஸ்தானம், பக்தர்களுக்கு உணவு வழங்க, தரமான பொருட்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை, அன்னதான கூடம் குறித்து, புகார் ஏதும் வரவில்லை. தேவஸ்தானத்தின் இச்செய்கை மிகவும் பெருமையளிக்கிறது. இச்சேவை மேலும், தரமாக தொடர வேண்டும். இவ்வாறு, அவர்கள் பாராட்டினர். சுப்பிராமி ரெட்டி, தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.