தைப்பூச திருவிழா கொண்டாட்டம் காவடி செய்யும் பணி தீவிரம்
பெ.நா.பாளையம்: தைப்பூச திருவிழாவையொட்டி, துடியலூர் அருகே வெள்ளக்கிணறில் காவடி செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. காவடி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சாமியப்பன் கூறியதாவது: "செலுத்து காவடி எனப்படும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள், இக்காவடியை விரதமிருந்து எடுத்துச் செல்வது வழக்கம். இக்காவடியின் உள்கூடு இரண்டரை அடியில் இருந்து காவடியின் தன்மைக்கு ஏற்றவகையில் அமையும். இக்காவடியின் எடை சுமார் 5 கிலோ வரை இருக்கலாம். முன்பு பாதயாத்திரையாக முருகனை வழிபட செல்பவர்கள், அனைவரும் கட்டாயம் காவடி ஏந்தி செல்வது வழக்கம். ஆனால், தற்போது பலர் பாதயாத்திரையாக மட்டுமே செல்கிறார்கள். காவடி ஏந்தி செல்வதில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தைப்பூச சீசனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவடிகள் செய்வோம். ஆனால், இப்போது, 300 லிருந்து 400 காவடிகளுக்கான "ஆர்டர்கள் மட்டுமே கிடைக்கிறது. மூங்கில் மற்றும் மூங்கில் தப்பைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, கோவை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, சேகரித்து வர வேண்டிய நிலை உள்ளது. மாம்பலகை சதுரம் 320 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரையும், மூங்கில் ஒரு அடி 15 ரூபாய் எனவும் விற்பனையாகிறது. காவடிகள் அதன் அளவைப் பொறுத்து ரூ. 250 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்கிறோம். இதை தொழிலாக கருதாமல் இறைப்பணியாக கருதுவதால், காவடி வாங்க வரும் நபர்களிடம் கறாராக பேசி விற்பனை செய்வதில்லை. காவடிக்கு செய்ய வேண்டிய அலங்கார வேலைகளை வாங்கும் நபர்களே அவரவர்களின் வேண்டுதல், ரசனைக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்வர். இவ்வாறு, சாமியப்பன் கூறினார்.