உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமி அம்மன் கோயில் சன்னதி முகப்பு நிலை கால் பணி துவக்கம்

அபிராமி அம்மன் கோயில் சன்னதி முகப்பு நிலை கால் பணி துவக்கம்

திண்டுக்கல்: புதிதாக புனரமைக்கப்பட்டு வரும் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில், காளஹத்தீஸ்வரர் ட்பட அனைத்து சன்னதிகளின் முகப்பு நிலை கால் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்காக புனரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, சிதிலமடைந்திருந்த கோயிலின் அனைத்து பகுதிகளும் முழுமையாக அப்புறப் படுத்தப்பட்டன. கோயிலில் இடம்பெறும் நான்கு சன்னதிகள் 12 அடி உயரத்தில், அலங்கார வரிவர்க்க கற்கலால் உருவாக்கப்படுகிறது. இதுவரை 6 அடி உயரத்திற்கான பணி நிறைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு வரிவர்க்க கற்களிலும், மலரும் தாமரை பூக்களுடன் பல்வேறு விதமான சித்திரவேலைபாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருநிலை கால் என அழைக்கப்படும் முகப்பு நிலை கால், ஒவ்வொரு சன்னதிகளில் அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. அபிராமி அம்மன் கோயிலின் நாயகரான காளஹத்தீஸ்வரர் சன்னதியில் முதல் முகப்பு நிலை கால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏழு அடி உயரம், நான்கு அடி அகலத்திலான கற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்களிலும் கொடி கருக்கு வேலை பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சன்னதியிலும் உள்ள இரண்டு வாசல்களை இந்த அழகிய கற்கள் தாங்கி நிற்கும். இந்த பணி நிறைவடைந்தவுடன் 5,600 சதுர அடியில் மகா மண்டபம் கட்டப்படவுள்ளது. இதற்காக விரிசல் இல்லாத 52 தூண்கள் தேர்வு செய்யப்பட்டு சித்திர வேலைபாடுகள் செதுக்கும் பணி துவங்க உள்ளது. ஒவ்வொரு தூணிலும் அஸ்வபாதம்(குதிரையின் கால்பகுதி அடையாளம்), நாகபந்தம்(பாம்பு படம் எடுத்து நிற்கும் சிற்பம்), இடைக்கட்டு (அழகிய ஒற்றை வளையம்), போதியல் (வாழைப்பூவின் முனைப்பகுதி) சித்திரங்கள் இடம்பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !