பழநி தைப்பூச விழாவில் கோயில் யானை கஸ்தூரி பங்கேற்குமா?
பழநி: பழநிகோயில் யானை கஸ்தூரி, கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும், புத்துணர்வு முகாமில் உள்ளதால், தைசப்பூச விழாவில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழநி தைப்பூசவிழா நாட்களில், கோயில் யானை கஸ்தூரி, சுவாமியுடன் திருவுலா வந்து பக்தர்களுக்கு ஆசிவழங்கும், மேலும் திருத்தேரோட்டத்தின் போது, மேடான பகுதியில், தேரை இழுத்து செல்வதற்கு, கஸ்தூரி யானை பெரிதும் உதவி புரிகிறது. இந்த ஆண்டு, யானை கஸ்தூரி, கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் பிப்.,4 வரை நடக்கும், சிறப்பு புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளது. தைப்பூச விழா துவங்க, இன்னும் ஒரு சில நாட்களே உள்ளநிலையில், இதுவரை, யானையை பழநிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை. தைப்பூச விழாவில், யானை கலந்துகொள்ள வேண்டும், என்பது பெரும்பாலான பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தைப்பூச விழாவிற்கு, யானை கஸ்தூரியை அனுப்பிவைக்க, ஏற்கனவே அரசிடம் கேட்டுள்ளோம். முதல்வரின் சிறப்பு திட்டம், என்பதால் அவரது அனுமதிக்காக காத்திருக்கிறோம். விழா துவங்க சில நாட்களே உள்ளதால், இந்த ஆண்டு தைப்பூச விழாவில், கஸ்தூரி யானை, பங்கேற்பது சந்தேகம் தான், என்றார்.