விவேகானந்தரை படியுங்கள்: தேசம் வல்லரசாகும்!
திருப்பூர்: நமது கலாச்சாரத்தை பின்பற்றாமல், கசக்கும் வேப்பங்காயான அன்னிய நாட்டு கலாச்சாரத்தை சுவைக்கிறோம். அதற்கு காரணம், பெரியவர்களான நாம், இளைஞர்களுக்கு அவற்றை புகட்டாததுதான். விவேகானந்தரை படியுங்கள்; தேசம் வல்லரசாகும், என்று பா.ஜ., தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திராஜன் பேசினார். சுவாமி விவேகானந்தர் 150 வது ஜெயந்தி விழா குழு மற்றும் விவேகானந்தா வித்யாலயா பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில், விவேகானந்தர் கருத்தரங்கம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் கருத்தரங்கிற்கு, விவேகானந்தர் ஜெயந்தி விழா குழு தலைவர் சின்னு தலைமை வகித்தார். இதில், "தேசியமும், விவேகானந்தரும் என்ற தலைப்பில், பா.ஜ., தேசிய செயலாளர் தமிழிசை சுவுந்தரராஜன் பேசியதாவது: தேசத்தின் பெருமையை உலகிற்கு எடுத்து காட்டியவர் விவேகானந்தர்; அவரது எழுத்து, கருத்து, பேச்சு என அனைத்திலும் தேசியம் இருக்கும். இந்தியாவில் தாய்மை போற்றப்படுகிறது; வெளி நாடுகளுக்கு செல்லும் முன்பு தேசத்தை நேசிக்கிறேன் என்றார். திரும்பி வந்ததும் வணங்குகிறேன் என்றார்; அந்தளவுக்கு பெருமை மிக்க கலாச்சாரத்தை கொண்டது நமது பாரதம். விவேகானந்தரின் பேச்சு, சுபாஷ் சந்திர போஸ் என்ற வீரனை நாட்டுக்கு தந்தது. நமது தேசப்பிதா காந்தியே, தமக்கு விவேகானந்தரின் பேச்சு, முன்பை விட ஆயிரம் மடங்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்தியது, என்று குறிப்பிடுகிறார். ஒரு நாய் கூட உணவில்லாமல் எனது தேசத்தில் இருக்க கூடாது என சுவாமிஜி கூறினார். ஆனால், இன்றைய தேசத்தில் 40 கோடி மனிதர்கள் உணவில்லாமல் உள்ளனர். இதற்கு காரணம், நாம் விவேகானந்தரை பின்பற்றாததே. 150 ஆண்டுகளுக்கு முன்னரே, எனது தேசம் உலகிற்கே வழிகாட்டும் என கனவு கண்டார். அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இன்று பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அதற்கு நம்மிடம் தியானம், மன ஒருமைப்பாடும் உள்ளது. நமது கலாச்சாரத்தை பின்பற்றாமல், கசக்கும் வேப்பங்காயான அன்னிய நாட்டு கலாச்சாரத்தை சுவைக் கிறோம். அதற்கு காரணம், பெரியவர்களான நாம், இளைஞர்களுக்கு அவற்றை புகட்டாததுதான். குரு, தாய், தந்தையரை மதிக்க வேண்டும்; தன் மனதை ஒருமுகப்படுத்தி, முயற்சியை துவக்க வேண்டும். பணம் இல்லாவிட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம். உலகத்துக்கு நமது தேசம் வழிகாட்டியாக இருக்க, இன்றைய இளைஞர்கள் விவேகானந்தரை படிக்க வேண்டும்; அவர் வழி நடக்க வேண்டும்; வருங்கால பாரத தேசம் பெருமை மிக்கதாக மாற இளைஞர்கள் பங்காற்ற வேண்டும். விவேகானந்தர் மடியவில்லை, ஒவ்வொருவர் மனதிலும் வாழ்கின்றார் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒருநாள் நிச்சயம் பாரத தேசம், உலகுக்கு வழிகாட்டியாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், விவேகானந்தா வித்யாலயம் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் கனகபூபதி, சுலோச்சனா ஸ்பின்னிங் உரிமையாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.