வேலையைத் தேடி அலையாதீர்கள்.. வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்!
புதுார்: பட்டதாரி இளைஞர்கள் வேலை தேடி அலையக் கூடாது. வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், என, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசினார். மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில், சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழா, இளைஞர் தின கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா ராமகிருஷ்ண மடத்தில் நடந்தது. மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியாவின் வீரத்துறவி எனப்படும் சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் பெருமையையும், இந்து மத இறையாண்மையையும் உலகிற்கு உணர்த்தியவர். இளைஞர்கள் இந்தியாவின் இரும்புத்துாண்கள், அவர்கள் இந்தியாவுக்கு ஆதாரமாகவும், உறுதியாகவும் உள்ள ஆணிவேர்கள் என்பதை உணர்த்தியவர் விவேகானந்தர். பணம் சம்பாதிக்கும், இயந்திர மயமான கல்வியை சுவாமி விவேகானந்தர் விரும்பவில்லை. மூளைக்குள் பல விஷயங்களை திணித்து வைப்பது கல்வியல்ல. பட்டதாரிகள் வேலையைத்தேடி அலையக்கூடாது. அவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், என்றார். அவர் கூறிய கருத்துக்கள் அனைவருக்கும் பொருந்தும். இதனால்தான் உலக நாடுகள் அவரது ஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றன. இங்கிலாந்து, மலேசியா, இலங்கை நாடுகள் விவேகானந்தர் தபால் தலை வெளியிட்டு, சிறப்பித்துள்ளன. இந்திய அரசு 4 தபால் தலைகளும், நாணயங்களும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 9 பல்கலைகளில் விவேகானந்தர் பற்றிய பாடப்பிரிவுகள் துவக்கவும், ஆராய்ச்சி மேற்படிப்பு துவங்கவும் அரசு உத்தரவிட்டு உள்ளது, என்றார். தினமலர் சார்பில் விவேகானந்தர் பற்றி பல்வேறு தலைப்புகளில் நடந்த கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை, விவேகானந்தர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியன், தஞ்சாவூர், சாஸ்திரா பல்கலை பேராசிரியர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.