பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்க வாசல் திறப்பு விழா
பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை(11ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி, அதிகாலை 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும்; காலை 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சொர்க்க வாசலில், கட்டுவதற்கு காய், கனிகள் மற்றும் திரவிய பொருட்கள் அனைத்தும் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஜமீன் ஊத்துக்குளி: ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை நடைபெறுகிறது. விழாவையொட்டி, காலை 5:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
உடுமலை: உடுமலை பெரியபட்டி, உப்பாற்றங்கரையில் உள்ள ஸ்ரீனிவாச அனுமந்தப் பெருமாள் கோவிலில், ஏகாதசி முன்னிட்டு, நாளை காலை 5.00 மணிக்கு, சொர்க்க வாசலுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டு, 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. பெரியபட்டியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நாளை இரவு 7.30 மணிக்கு ஏகாதசி நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்காரம், நெய்வேத்யம், தீபாராதனை நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு, பெருமாள் வீதியுலா நடக்கிறது. உடுமலை, நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜப் பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவம் நாளை நடக்கிறது. இதைமுன்னிட்டு, நாளை அதிகாலை 4.30 மணிக்கு, மூலவர் பெருமாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. காலை 6.30 முதல் 10.30 மணி வரை, சமயபுர ஆயிர வைசியர் புதிய மண்டபத்தில் சிறப்பு பூஜையும், 10.30 மணிக்கு, சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு, உற்சவருக்கு ஏகாதசி அபிஷேகம் நடக்கிறது. -நமது நிருபர் குழு-