காஞ்சி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற 108 திவ்யதேச கோவில்களான அஷ்டபுஜம் மற்றும் வைகுண்ட பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 4:55 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சயன கோலத்தில் அரங்கநாத பெருமாள் காட்சி அளித்தார். மேலும், காலை 7:30 மணிக்கு, கருடசேவை நடைபெற்றது. இதில், கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், முக்கிய விதிகளில் உலா வந்தார். மேலும், சொர்க்க வாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக, அதிகாலை 4:00 மணி முதலே, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பெருமாள் வழிபட்டனர். இதேபோல், மாமல்லபுரம் திருவிடந்தை பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், மதுராந்தகம் கோதண்ட ராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், அதிகாலைசொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.