தைமாதம் பிறக்கும் நேரம் நாடு எப்படி இருக்கும்?
தைமாதம் சுக்லபட்சம் திரிதியை திதி, அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம், கும்பலக்னம், கும்பராசி, செவ்வாய் ஓரையில் காலை 9.28க்கு பிறக்கிறது. அன்று திங்கள்கிழமை. அந்நாளில் சூரியன் மகரராசியில் நுழைகிறார். இதை "மகர சங்கராந்தி என்பர். "சங்கராந்தி என்றால் "நுழைதல். ஒவ்வொரு ஆண்டும் வரும் மகரசங்கராந்திக்கு, ஒரு தேவதையை ஜோதிட சாஸ்திரத்தில் நியமித்துள்ளனர். இந்த தேவதையை "புருஷர் என்பர். இவ்வாண்டுக்குரிய புருஷரின் பெயர் தூவங்கிஸி. இவர் பூமியை நோக்கி கிழக்கே அமர்கிறார். இதனால், நாடெங்கும் நல்ல மழை பொழியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழமையான கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். கேரள கோயில்களுக்கு பக்தர்கள் விரும்பிச் செல்வர். குடும்பங்களில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரிகள் அமோக லாபம் காண்பர். கால்நடை வளர்ப்பில் லாபம் உயரும். கடல்வாணிபத்தில் ஆதாயம் பெருகும். தொழில் துறையில் வெளி நாட்டவர்களின் முதலீடு கூடும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அரசிடம் சலுகை பெறுவர். தொல்பொருள் ஆராய்ச்சியில் வளர்ச்சி ஏற்படும். தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறையும்.
உங்கள் நட்சத்திரத்துக்கு என்ன பலன்?
தை மாதம் பிறக்கும் நேரத்தின் அடிப்படையில், அவரவர் நட்சத்திரத்துக்குரிய பலன்கள் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த தை வரை இது பொருந்தும். அசுவினி, பரணி, கிருத்திகை, பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தினருக்கு பணவரவு நன்றாக இருக்கும். ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரையில் பிறந்தவர்கள் வீடு, பணியில் இடமாற்றம் காண்பர். புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தினர் மனை, பூமியால் ஆதாயம் பெறுவர். விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தினர் அரசு வகையில் ஆதாயம், பட்டம், பதவி பெற்று வாழ்வில் உயர்வர். கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் அஸ்தம், சித்திரை, சுவாதியில் பிறந்தவர்களே. இவர்கள், சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்து மாட்டிக் கொள்ளக்கூடாது. அரசாங்க விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருவோணம், அவிட்டம், சதயம் நட்சத்திரத்தினருக்கு பிரச்னை எதுவும் இல்லை என்றாலும், செலவு அதிகமாக இருக்கும்.