திருக்கோஷ்டியூரில் பரமபதவாசல் திறப்பு
திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயண பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபத வாசல் திறக்கப்பட்டது. இங்கு, வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஜன.,1 முதல் 10ம் தேதி வரை, பகல் பத்து உற்சவம் நடந்தது. ஜன.,10ல் திருமங்கை ஆழ்வாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியுடன், பகல் பத்து உற்சவம் முடிந்தது. நேற்று முன்தினம், காலை 8 மணிக்கு மேல், திருமாமணி மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் சயன கோலத்தில் எழுந்தருளினார். அன்று, இரவு பெருமாள் ராஜாங்க சேவை மற்றும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜன.,11 அன்று இரவு 10 மணிக்கு சுவாமி தங்கப்பல்லக்கில் தாயார் சன்னதியில் எழுந்தருளினார். பின்னர், ஆண்டாள் சன்னதியில் காட்சி அளித்தார். இரவு 11 மணிக்கு, பரமபத வாசல் திறக்கப்பட்டு, சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளிய, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.