உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 16-ந் தேதி தை தெப்பத்திருவிழா -இன்று சட்டத்தேரில் சுவாமி வீதிஉலா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 16-ந் தேதி தை தெப்பத்திருவிழா -இன்று சட்டத்தேரில் சுவாமி வீதிஉலா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி காலை, மாலை என வேளைகளில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். திருவிழாவில் இன்று (13-ந் தேதி) காலை 9.45 மணிக்கு மேல் சட்டத்தேரில் சுவாமி எழுந்தருளி சித்திரை வீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (14-ந் தேதி) பொங்கல் அன்று தெப்பக்குளத்தில் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அம்மன், சுவாமியும் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, அம்மன் சன்னதி, பூக்கடை வீதி, முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் சுற்றி முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுவர். மாலையில் ரிஷப வாகனத்தில் அம்மனும், சுவாமியும் கோவிலுக்கு வந்த பிறகு, கல்யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை நடக்கிறது. 15-ந் தேதி சிந்தாமணியில் கதிர் அறுப்புத்திருவிழா நடக்கிறது.தெப்பத்திருவிழாவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 5 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பாடாகிறார்கள். அங்கு விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை 10.30 மணிக்கு மேல் 10.55க்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்கள். தெப்ப உற்சவம் தினத்தன்று மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !