தைப்பூச திருவிழா: மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்!
மயிலாப்பூர்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில், தைப்பூச தெப்பத் திருவிழா, ஜன., 15 முதல், 17ம் தேதி வரை, நடக்கிறது. அதனால், மூன்று நாட்களுக்கு கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. லஸ் ரவுண்டானா - ஆர்.கே.மடம் சாலை, கச்சேரி சாலை - மத்தன நாராயணன் தெரு, டாக்டர் ரங்கா சாலை- வெங்கடேச அக்ரஹாரம், புனிதமேரி சாலை - ஆர்.கே.மடம் சாலை, சித்ரகுளம் கிழக்கு- சித்ரகுளம் வடக்கு தெரு, மந்தைவெளி சாலை - ஆதம் தெரு, தென்கூர் செல்வ விநாயகர் கோவில் தெரு, மேற்கு சித்திர குளம் தெருவிற்கும் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை - அடையாறு செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, வாரன் சாலை, சிருங்கேரி மடம், ஆர்.கே மடம் ரோடு, மந்தைவெளி வழியாக செல்லலாம். அடையாறு - ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள், ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி, வி.கே.அய்யர் ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக செல்லலாம். மயிலாப்பூர் குளம் அருகில் உள்ள மாநகர பஸ் நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தங்கள்:ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்கள், பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம். மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்கள் வாகனங்கள், லஸ்சர்ச் சாலை, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்தலாம், மேற்கில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்கள், சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம் மயிலை ரயில் நிலைய பாலத்தின் கீழ் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.