உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏக நாயகர் கோவில் பசு மடத்தில் மாடுகளை பூஜிக்கும் ஜெயின் சமூகத்தினர்

ஏக நாயகர் கோவில் பசு மடத்தில் மாடுகளை பூஜிக்கும் ஜெயின் சமூகத்தினர்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 18 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பசு மடத்தில், 170 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உழவு தொழிலை பிரதானமாக செய்து வந்த தமிழர்கள், தலைமுறை தலைமுறையாக தங்களின் உற்ற நண்பனாக மாடுகளை வளர்த்து வந்தனர். உழவு தொழிலில் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரிப்பு, தீவனம் தட்டுப்பாடு, மேய்ச்சல் நிலங்கள் குறைவு போன்ற காரணங்களால், விவசாயிகளிடம் மாடுகளை வளர்க்கும் ஆர்வம் குறைந்தது. பெரும்பாலும் இறைச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதால் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே சமயத்தில் பசு மடங்கள் அமைத்து சிலர் மாடுகளை அக்கறையுடன் பராமரித்து வருகின்றனர். விருத்தாசலம் பெண்ணாடம் சாலை ஏக நாயகர் கோவில் வளாகத்தில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பசு மடத்தில், இளங்கன்றுகள் முதல் வயதானவை வரை 170 மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. ஜெயின் சமூகத்தினர் ஆண்டுதோறும் சிவராத்திரி, மாட்டுப் பொங்கல் நாட்களில் பசு மடத்திலுள்ள மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். பசு மடத்தின் நிர்வாகி சுரேஷ் கூறுகையில், "இந்த மடம் 18 ஆண்டுகளுக்கு முன் ஐந்து மாடுகளுடன் துவக்கப்பட்டது. பொதுமக்கள் வைத்து பராமரிக்க முடியாத மாடுகளை, பராமரிக்கிறோம். மடத்தில் தற்போது 170 மாடுகள் உள்ளன. இங்குள்ள பசுக்களிடம், அதன் கன்றுகள் மட்டுமே பால் குடிக்கும். பாலை கறப்பதில்லை. மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று, தீவனம் கொடுத்து பராமரிக்க எட்டு பேர் உள்ளனர். மூன்று கால்நடை மருத்துவர்கள் தினமும் கவனித்து வருகின்றனர். பொதுமக்கள் மாடுகளை பராமரிக்க முடியவில்லையெனில், எங்களிடம் வழங்கினால் அக்கறையுடன் பராமரிப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !