மலைப்பகுதியில் பூப்பறிக்கும் விழா சென்னிமலை பெண்கள் உற்சாகம்
சென்னிமலை: சென்னிமலை பகுதியில், தை பொங்கலை முன்னிட்டு, பூப்பறிக்கும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறித்தனர். தை பொங்கலை முன்னிட்டு, சென்னிமலை பகுதியில் தை இரண்டாம் நாள், பூப்பறிக்கும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று, சென்னிமலை நகரில் உள்ள பொதுமக்கள், சென்னிமலையின் தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று, பூப்பறித்து வந்தனர். இதேபோல் தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோவில் பகுதியிலும், தாங்கள் கொண்டு சென்ற கரும்பு மற்றும் உணவுகளை உண்டு மகிழ்ந்து, அப்பகுதியில் பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து வந்தனர். பூப்பறிக்கும் நிகழ்ச்சியின்போது, இளம் பெண்கள், தைப்பொங்கலின் பெருமையை கூறும் வகையில், பாட்டுப்பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர். பின், மாலையில் வீடு திரும்பி, வாசலில் கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை, தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் போடுவார்கள். இந்த ஆண்டு பெண்கள் கூட்டம், மிக அதிகமாக இருந்தது. படித்த பெண்கள் பலர், கூட்டம் கூட்டமாக வந்து பூப்பறிக்கும் விழாவில், கலந்து கொண்டு, உற்சாகமாக கும்மியடித்து மகிழ்ந்தனர். இளவட்ட ஆண்களும், வேட்டி அணித்து, புதுமையாக கும்பல் கும்பலாக வந்திருந்தனர். அதிக இளவட்ட பெண்கள், ஆண்கள் திரண்டதால், அசம்பாவிதம், திருட்டு போன்றவை நடக்காமல் இருக்க, சென்னிமலை எஸ்.ஐ., துரைசாமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.