மயிலாப்பூர் தெப்ப உற்சவத்தில் சிங்கார வேலர்!
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்ப திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, தெப்பத்தில், சிங்காரவேலர் எழுந்தருளி, வலம் வந்தார். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூச தெப்ப திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம், சந்திரசேகரர், கஜமுகாசுர சம்ஹார கோலத்தில், தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான நேற்று சம்பந்தி, தவனம், ரோஜா, முல்லை, மருக்கொழுந்து உள்ளிட்ட வண்ண மலர்கள் சூடி, தினைப்புனத்தில், வள்ளியை கவர்வதற்காக வந்த வேடன் கோலத்தில் சிங்காரவேலர் அலங்கரிக்கப்பட்டார். தெப்பம், குளத்தில் ஏழு முறை வலம் வந்தது. வேதபாராயணம், திருமுறை இசை, நாதஸ்வர இசை நடந்தன. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கினர். உற்வசத்தில், அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்க தயார் நிலையில் அவசர வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.