ஆக்ரோஷமாய் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் முறையாக
அலங்காநல்லூர்:உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. முதல் முறையாக "மாடுபிடி நாயகன் தேர்வு செய்யப்பட்டார். ஏழு காளைகளை அடக்கிய அவர், தங்கக்காசு, வெள்ளிக்காசு, பைக் உள்ளிட்ட பரிசுகளை அள்ளினார். காளைகளை அடக்க முயன்ற கட்டிளங் காளையர்கள் உட்பட 49 பேர் காயமடைந்தனர். பார்வையாளர் ஒருவர் உட்பட ஏழு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அலங்காநல்லூர் காளியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இந்தாண்டு விழாவை நேற்று காலை 7.40 மணிக்கு கலெக்டர் சுப்பிரமணியன் துவக்கினார். முதல் முதலாக கோயில் முனியாண்டி காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை வீரர்கள் யாரும் பிடிக்காமல் தொட்டு வணங்கினர். அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். காளையை தனி நபராக அடக்கியபடி எல்லைக்கோடு வரை சென்ற வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டு வேட்டி, சைக்கிள், மின் விசிறி உள்ளிட்ட பரிசுகள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டன.
உசுப்பேற்றிய விழாக்குழு: தமிழர் வீர விளையாட்டுக்குழு தலைவர் பி.ராஜசேகரனின் இரண்டு காளைகள், அடுத்தடுத்து அவிழ்க்கப்பட்டது. இக்காளைகளை அடக்குவோருக்கு ஏராளமான பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டன. "சூப்பர் காளை பிடிச்சுப்பார்... என விழாக்குழுவினர் வீரர்களை உசுப்பேற்றினர். எனினும், 2 காளைகளும் வீரர்களுக்கு போக்கு காட்டி "எஸ்கேப் ஆனது. மதுரை பி.கே. செல்வத்தின் மூன்று காளைகள் அடுத்தடுத்து அவிழ்க்கப்பட்டது. இக்காளைகளுக்கும் ஏராளமான பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டன. இரண்டு காளைகள் பிடிபடவில்லை. மூன்றாவது காளையை இருவர் அடக்கிய தால் பரிசு காளையின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. திருச்சி ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் தொண்டைமானின் காளை "ஏசி வாகனத்தில் வரவழைக்கப்பட்டது. "திமிர் பிடித்த இந்த காளையை அடக்க முடியுமா? என விழாக்குழு சவால் விட்டது. அக்காளையை அடுத்தடுத்து இருவர் மடக்கினர். இருவருக்கும் பரிசுகள் பிரித்து வழங்கப்பட்டன. களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
49 பேர் காயம்: ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள 640 காளைகள் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்த 549 வீரர்களில், தகுதியற்ற 33 பேர் வெளியேற்றப்பட்டனர். மதியம் 2:00 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. நேரமின்மையால் 36 காளைகளை அவிழ்க்க முடியவில்லை. விதிமீறிய வீரர்கள் கண்ணன், ஆனந்த், சத்தியராஜ், மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் உட்பட 49 பேர் காயமடைந்தனர். அவர்களில் தேனூர் அல்லாப்பிச்சை, 41, அலங்காநல்லூர் மணிகண்டன், 25, முனிசாமி, 33, குறவன்குளம் ஜெயமூர்த்தி உட்பட 7 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில், மதுரை தண்டலையை சேர்ந்த கணேஷ்பாண்டியன், 38, என்பவர் கவலைக்கிடமாக உள்ளார்.
மாடுபிடி நாயகன் தேர்வு: இந்த ஜல்லிக்கட்டில் முதல்முறையாக "மாடுபிடி நாயகன் தேர்வு செய்யப்பட்டார். அவர், வீரபாண்டியை சேர்ந்த மதுரை நகர ஆயுதப்படை போலீஸ்காரர் வினோத், 29. இவர், ஏழு காளைகளை அடக்கி அசத்தினார். அவருக்கு தங்கக்காசு உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
நடிகர்களின் பரிசு: ஜல்லிக்கட்டு விழாவை காண வந்திருந்த நடிகர் விமல், காமெடி நடிகர் "புரோட்டா சூரி ஆகியோர், தங்களது சார்பில் சிறந்த வீரருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கினர். விமல் கூறுகையில், ""ஜல்லிக்கட்டை நேரடியாக பார்ப்பது பிரமிப்பாக உள்ளது. மக்களுடன், மக்களாக பார்ப்பது ஜாலி. இதை நான் வாழ்க்கையில் மறக்க மாட்டேன், என்றார்.
சூரி கூறுகையில், ""நானும் மதுரைக்காரன் தான். எனது ஊர் ராஜாக்கூர். மதுரை என்றாலே ஒன்று மீனாட்சி அம்மன் கோயில், மற்றொன்று ஜல்லிக்கட்டு. தென்மாவட்ட அளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேமஸ். சிறு வயதில் பார்த்துள்ளேன். இப்போதும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, என்றார்.
27 முறை கண்டுகளித்த பெல்ஜியம் அதிகாரி பேட்டி: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஹெம்க், ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரி, பெல்ஜியம்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்முறையாக 1987ல் பார்த்தேன். அன்று முதல் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டை கண்டுகளித்து வருகிறேன். தற்போது 27வது ஆண்டு. 1994ல் ஜல்லிக்கட்டு குறித்து சிறப்பு புகைப்பட ஆல்பம் வெளியிட்டேன். டேனியல், ரயில்வே, பாரீஸ்: நான் புதுச்சேரியை சேர்ந்தவன். நானும், மேரியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். மேரி பாரீஸ் ரயில்வேயில் வேலை பார்க்கிறார். நான் பலமுறை ஜல்லிக்கட்டை பார்த்துள்ளேன். தமிழர்களின் வீர விளையாட்டு உலகம் முழுவதும் பரவ வேண்டும், என்பதற்காக, மேரியை முதல்முறையாக ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வந்தேன்.