நாமக்கல் கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம்
சேலம்: நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில் நடந்த தைப்பூச தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டியில் உள் புகழ்பெற்ற கந்தசாமி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச தேர் திருவிழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, 14, 15ம் தேதி மதியம், 1 மணிக்கு, கந்தசாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், 16ம் தேதி, மதியம், ஸ்வாமிக்கு, சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும், இரவு, 10.30 மணிக்கு திருக்கல்யாண வைபமும், ஸ்வாமி தேருக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது.தைப்பூச தேர்த் திருவிழா, நேற்று மாலை நடந்தது. இதையொட்டி, அதிகாலை, 5 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், காலை, 6 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4 மணிக்கு, தைப்பூச தேர்த் திருவிழா நடந்தது. தேர்த் திருவிழாவில், சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேர் முன் செல்ல, கந்தசாமி, வள்ளி, தெய்வானையுடன் தேரில் திருவீதி உலா வந்தார். விழாவையொட்டி, நேற்று காலை முதலே, நாமக்கல், சேலம், மல்லசமுத்திரம், வீரபாண்டி, ராசிபுரம், ராமகிரிபேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடிகள் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.தேர்த் திருவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில், புகழ் பெற்ற மாட்டுச்சந்தையும் துவங்கியது.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், பரம்பரை அறங்காவலர் பூசாரி செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.காளிப்பட்டி கந்தசாமி கோவில் தேர்திருவிழாவையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.