திருப்பூரில் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!
திருப்பூரில், பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது, பண்டைய கால வரலாற்று தகவல்களை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. திருப்பூர் கால்நடை மருத்துவமனையின் பின்புறம் உள்ள, சுப்ரமணிய செட்டியார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், மரம் நடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டன. அப்போது, இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி தொல்லியல் துறை பேராசிரியர் ரவி, மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். முதல் முதுமக்கள் தாழி, 140 செ.மீ., நீளமும், 80 செ.மீ., குறுக்களவும், இரண்டாவது முதுமக்கள் தாழி, 120 செ.மீ., நீளமும், 25 செ.மீ., குறுக்களவும் கொண்டதாக இருந்தன. முதுமக்கள் தாழிகள் கிடைத்த அப்பகுதி, கடந்த காலத்தில், "பாண்டியன் குழிக்காடு என, அழைக்கப்பட்டு வந்ததாக, அப்பகுதி மக்கள், ஆய்வுக் குழுவிடம் தெரிவித்தனர். இதுகுறித்து, பேராசிரியர் ரவி கூறியதாவது: புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால மக்கள், இறந்த மனிதனோடு, அவன் பயன்படுத்திய பொருட்களை சேர்த்து புதைப்பது, வழக்கம். இவ்வகையில், முதலாவது முதுமக்கள் தாழியில், கறுப்பு வண்ணம் பூசப்பட்ட ஒன்றரை செ.மீ., விளிம்புடைய உணவுத் தட்டு உடைந்த நிலையில், தலை எலும்புகளுடன் காணப்பட்டன. இரண்டாவது தாழியில், மண்டை ஓடு கிடைக்கப் பெறாத நிலையில், எலும்புகளின் சில பகுதிகள் மட்டும் கிடைத்துள்ளன. இரண்டிலுமே, மனித எலும்புகளின் சில பகுதிகள் கிடைத்தன. இருந்தாலும், முழுமையாக கிடைக்கப் பெற்ற, முதல் முதுமக்கள் தாழியில், இறந்த மனிதனின் மண்டை ஓடு மற்றும் நெஞ்சு எலும்புகள் கிடைத்துள்ளன. கால் எலும்பு பகுதி கிடைக்காதது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது தாழியில், மனித் தலை கிடைக்கப் பெறவில்லை என்பது முக்கியமானது. இருகூர், கொடுமணல் ஆகிய கொங்கு பகுதியில், செய்த அகழாய்வில் மனிதனின் முழு வடிவ, எலும்புக்கூடுகள் கிடைத்தன. மதுரை கோவலன் பொட்டலில், மண்டை ஓட்டோடு கிடைக்கப்பெற்ற மனித எலும்புக் கூட்டில் ஒரு கை எலும்பு மட்டும், காணப்படவில்லை. ஏனெனில், பண்டைய காலத்தில், மனிதனை சமூகத்துக்குள் இணைக்க, ஏதேனும் ஒரு உறுப்பை ஊனமாக்குகிற பழக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அது போன்ற வழக்கம், இங்கும் இருந்திருக்குமோ என, எண்ணத் தோன்றுகிறது. கிடைக்கப் பெற்ற, மூன்று முதுமக்கள் தாழிகளுமே, திருப்பூரின் மையத்தில் கிடைத்திருப்பது, இதுவே, முதல்முறை. திருப்பூர் பகுதி, வரலாற்று காலத்துக்கு முன்பிருந்தே முக்கியத்துவம் பெற்ற பகுதியாக இருந்திருப்பதை, இந்த தாழிகள் மூலம் நிர்ணயம் செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.