சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மஹா தரிசனம்!
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூசத் தேர்திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மஹா தரிசனம் இன்று நடக்கிறது.சென்னிமலை மலை மேல் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய ஸ்வாமிக்கு தைப்பூச விழா ஆண்டு தோறும் மிக சிறப்பாக 15 நாட்கள் நடக்கும். இந்தாண்டு விழாவை முறைப்படி இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த நாட்டமை, பெரியதனகாரர்கள், பெரியவர்கள் முன் நின்று மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி தைப்பூச விழாவை துவக்கி வைத்தனர். சென்னிமலை மலை மீது கொடியேற்றத்துக்கு முன், முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவர்க்கும் பல்வேறு நெய்வேத்திய பொருட்கள் மற்றும் பவானி கூடுதுறையில் இருந்து கொண்டு வந்த தீர்த்தங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தலைமை குருக்கள் ராமநாதசிவம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து சுவாமிகளுக்கும், கொடிமரத்துக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு மதியம் 12.55 மணிக்கு சென்னிமலை இசை வேளாளர் சமூகத்தினர் குல கட்டளைபடி சேவல் கொடியை தாங்கி உரிய மேளதாளம் மற்றும் திருசன்னம் வாசித்து, கோவிலை வலம் வந்து கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி 15 நாட்கள் சிறப்பாக நடக்கும் தைப்பூசவிழா, முறைப்படி துவக்கி வைத்தனர். இக்கோவிலில் 17ம் தேதி காலை 6.30 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. தைப்பூச விழாவின் முக்கிய விழாவான மஹாதரிசனம் இன்று (21ம் தேதி) நடக்கிறது. காலை, 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசுவாமிக்கு மஹா அபிஷேகம், அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு நடக்கும் மஹா தரிசன நிகழ்ச்சியின்போது, நடராஜப் பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காண்கின்றனர். அப்போது, முருகப்பெருமானை தரிசனம் செய்ய சென்னிமலை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.இரவு, 9.30 மணிக்கு நாதஸ்வர, தவில் கச்சேரி நடக்கிறது.தைப்பூசத்திருவிழாவுக்காக, கோவிலில் தினமும், ஈரோடு முருகனடியார் திருப்பணிக்குழு சார்பில் அன்னதானம் நடக்கிறது.22ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகமும், 9 மணிக்கு இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் வே.சபர்மதி, செயல் அலுவலர் கே.பசவராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.