உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசத்துக்கு தயாராகும் தங்கத்தேர் செஞ்சேரிமலையில் பணிகள் துரிதம்!

தைப்பூசத்துக்கு தயாராகும் தங்கத்தேர் செஞ்சேரிமலையில் பணிகள் துரிதம்!

பல்லடம்; செஞ்சேரிமலையில், தைப்பூச விழாவில் பயன்படுத்தும் வகையில், தங்கத்தேர் தயாரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.


கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, செஞ்சேரிமலையில், மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும், விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்வரும் தைப்பூச விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக, தங்கத்தேர் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


செஞ்சேரிமலை ஆதீன மடத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ஊர் பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பலரின் பங்களிப்புடன், தங்கத்தேர் செய்யும் பணி, கடந்த ஏப்., மாதம் துவங்கியது. அழகிய வேலைப்பாடுகளுடனும், கடவுள்கள், சித்தர்கள் மற்றும் முனிவர்களின் அழகிய உருவங்களுடனும், 12.4 அடி உயரத்தில் தங்க தேர் செய்யப்படவுள்ளது. முழுவதும் தேக்கு மரத்தாலும், அதன் வெளிப்பகுதி, செம்பு பதிக்கப்பட்டு, அதன் மேல், 1,100 பவுன் தங்கத்தால் முலாம் பூசப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், கீழ்ச்சீவல்பட்டியை சேர்ந்த சீனிவாசன் ஸ்தபதி மற்றும் குழுவினர், செம்பு கவசம் மற்றும் தங்க முலாம் பூசும் வேலையையும்; மாயமதம் சிற்பக் கலைக்கூடத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் குழுவினர், ரதத்தை தயாரிக்கும் மர வேலைப்பாடுகளையும் செய்து வருகின்றனர். எதிர்வரும், தைப்பூச விழாவுக்கு முன்பாக பணிகள் முடிவடைந்து, ‌ தங்கத்தேர் திருவிழாவுடன் தைப்பூச விழா விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !