உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறில் தியாகராஜருக்கு அபிஷேகம்: 1,000 கலைஞர்கள் இசையஞ்சலி!

திருவையாறில் தியாகராஜருக்கு அபிஷேகம்: 1,000 கலைஞர்கள் இசையஞ்சலி!

தஞ்சாவூர்: திருவையாறில், ஸ்ரீ தியாகராஜர் சுவாமி ஆராதனை விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற, பஞ்ச ரத்ன கீர்த்தனை இசையஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, ஸ்ரீ தியாகராஜர் சுவாமி, திருவாரூரில் பிறந்த இவர், தஞ்சை அருகே திருவையாறில், 1847ல் முக்தியடைந்தார். காவிரி ஆற்றின் கரையில், சமாதி, தியாகராஜர் உருவச்சிலை அமைந்துள்ளது. இதன் அருகே, மிகப்பெரிய பந்தலில், ஐந்து நாட்களாக, ஆராதனை விழா நடந்தது. கடந்த, 17ம் தேதி துவங்கி, 167வது ஆராதனை விழா, நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று, முக்கிய அம்சமாக, காலை, 9:00 மணி முதல் 10:00 மணி வரை, தியாகராஜர் சுவாமியின் பஞ்ச ரத்ன கீர்த்தனையை, ஆயிரக்கணக்கான கலைஞர்கள், ஒருசேர இசைத்தனர். பிரபல பாடகர்கள், ஜேசுதாஸ், சிவசிதம்பரம், அருண், பாடகியர் அனுராதா, மஹதி, சுதா ரகுநாதன் மற்றும், "சாக்ஸபோன் கத்ரி கோபால்நாத், "மாண்டலின் சீனிவாசன் உட்பட பலர் சிறப்பித்தனர். தியாகராஜர் சிலைக்கு, பால், மஞ்சள் திரவிய அபிஷேகம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருவீதியுலா, 12:00 மணிக்கு, ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !