ஞானாலயமாகிறது 500 ஆண்டு பழமையான கோவில்!
சேலம்: சேலம் அருகேயுள்ள கிராமத்தில், 500 ஆண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருவள்ளுவர் திருவுருவச் சிலை மற்றும் முன்மண்டபத்துடன், ஞானாலயம் கட்டும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. சேலம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது கோவிந்தம்பாளையம் கிராமம். இங்குள்ள வெண்கற்களாலான, 500 ஆண்டு பழமையான விநாயகர் கோவில், பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்தது. இக்கோவிலை, சீரமைத்து முன்மண்டபம் கட்டும் பணி, வள்ளலார் அருள்பெற்ற குருஜி தலைமையில், துறையூர், நாகலாபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் ஸ்தபதியால் துவக்கப்பட்டு, தற்போது தொடர்ந்து நடக்கிறது. கோவிலின்முன் 1,100 சதுரடியில் தூணில்லா மண்டபம் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில், திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. இந்த ஞான ஆலயத்தில், மனிதனை ஒழுக்க நெறிப்படுத்துவதற்கான ஆன்மிக வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆலயப்பணியின் பெரும்பகுதி நிறைவு பெற்றுள்ளது. வரும் ஏப்ரலில், குடமுழுக்கு நடத்த முடிவு செய்திருக்கும் நிலையில், திருப்பணியை பூர்த்தி செய்ய இயலாதவாறு நிதிப்பற்றாக்குறை நிலவுவதாக, கோவில் அறங்காவலர் முருகேசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ""நம் முன்னோர் காட்டிய பக்தி வழியில் கோவிலும், வள்ளுவப் பெருந்தகை சிலையுடன் கூடிய முகப்பு மண்டமும், பக்தி - அறிவும் சங்கமிக்கச் செய்யும் அமைப்புடையவை. இந்த மண்டபத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை கற்பிக்குமிடமாகவும், சமூக முன்னேற்ற பாட சாலையாகவும், ஞான ஆலயமாகவும் இருக்கும். நிதியளிக்க விரும்புவோர், இத்திருப்பணியில் பங்கேற்று, இறைவனின் அருள் பெறலாம். நிதியை, (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அருகலூர் கிளை) ஐ.எப்.எஸ்.சி., கோட்: IOBA 0000999, வங்கி கணக்கு எண்: 099901000009704 என்ற எண்ணில் செலுத்தலாம்; அல்லது,"Sri karpaga vinayagar thirukovil thiruppani committee என்ற பெயரில் "டிமாண்ட் டிராப்ட் எடுத்தோ, காசோலையாகவோ அனுப்ப வேண்டிய முகவரி: ஏ. முருகேசன், சதர்ன் கியர், இ-9, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை - 600 032. மேலும் விபரங்களுக்கு, 94440 59733 என்ற எண்ணில், என்னை தொடர்பு கொள்ளலாம், என்றார்.