பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு "ரிப்ளக்டர் ஸ்டிக்கர் வழங்கல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு போலீசார் "ரிப்ளக்டர் ஸ்டிக்கர் வினியோகம் செய்தனர். பழநியில் தைப்பூச திருவிழாவையொட்டி, பக்தர்கள் விரதமிருந்து பல்வேறு பகுதியிலிருந்தும் பாத யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. இந்தாண்டும், கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து பழநிக்கு பாத யாத்திரை சென்று வருகின்றனர். தைப்பூசம் நிறைவடைந்தும், பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகின்றனர். இரவு நேரங்களில், சாலையோரம் சாரை சாரையாக செல்கின்றனர். அவர்கள் விபத்திற்குள்ளாவதை தடுக்க போலீசார் "ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்ச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் நடந்தது. இதில், டி.எஸ்.பி., பாலாஜி, பக்தர்களுக்கு ஸ்டிக்கர் வழங்கினார். இதில், இன்ஸ்பெக்டர்கள் இளமுருகன், கோபிநாத் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் பங்கேற்றனர். "தொடர்ந்து பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு "ரிப்ளக்டர் ஸ்டிக்கர் வழங்கப்படும். பாதுகாப்பு கருதி, வாகனங்கள் வேகமாக வருகிறதா என கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என போலீசார் தெரிவித்தனர்.