உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பிப்.9 ல் கும்பாபிஷேகம்!

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பிப்.9 ல் கும்பாபிஷேகம்!

தேனி: தேனி கலெக்டர் பழனிசாமி தலைமையில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பிப்., 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக துவங்கியுள்ளனர். தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில், புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்து பிப்.,9ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. எஸ்.பி., மகேஷ், டி.ஆர்.ஓ., சோமுபாண்டியன், தேனி டி.எஸ்.பி., சீமைச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முத்துதியாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொன்னம்மாள், மருத்துவ இணை இயக்குனர் சையது சுல்த்தான் இப்ராஹீம், சுகாதார துணை இயக்குனர் காஞ்சனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமனாதன், கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் பேசியதாவது: பல லட்சம் பக்தர்கள் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பார்கள். எனவே ஆகம விதிப்படி யாகசாலை அமைக்க வேண்டும். கோபுரத்திற்கு நீர் ஊற்ற ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வலுவான சாரம் அமைக்க வேண்டும். கோபுரங்களின் சாரங்கள், மேடைகளின் உறுதி தன்மை, பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அமைத்தல், தடையில்லா மின் விநியோகம், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்துதல், கோயிலுக்கு செல்ல சிறப்பு பஸ்களை இயக்குதல், சுகாதாரம், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், தற்காலிக பந்தல்கள், கழிப்பிட வசதிகள், சாலைகள் சீரமைத்தல் போன்ற பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். போலீசார் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு செய்தல், அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்களிடம் பேசி சிறப்பு குழுக்களை அமைத்திட வேண்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !