பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். வரும், 23ம் தேதி இரவு, 8:00 மணிக்கு அணி எடுப்பு, 24ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் அபிஷேகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும்,25ம் தேதி கரியகாளியம்மன் பண்டிகை பூஜையும், 27ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கடைசி நாள் அபிேஷக பூஜையும் நடக்கிறது.
மார்ச், 3ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைத்தல், 6ம் தேதி வெளிப்பூவோடு ஆரம்பம், இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. 7ம் தேதி காலை, 10:30 மணிக்கு கொடி கட்டுதல், 8ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏ.பி.டி. பூவோடு வழிபாடு நடக்கிறது. வரும், 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல், 11ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று இரவு, 7:00 மணிக்கு முக்கிய நிகழ்வான முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது. விநாயகர் எழுந்தருளும் மரத்தேரும், அம்மன் எழுந்தருளும் வெள்ளித்தேரும் கோவில் வாளகத்தில் இருந்து வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் துவங்குகிறது. வரும், 12ம் தேதி இரவு, 7:00 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டமும், 13ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டத்தை தொடர்ந்து, தேர் நிலைக்கு வருதல், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல்; வரும், 16ம் தேதி மகா அபிேஷக பூஜையுடன் நிறைவடைகிறது.