உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனை அடைவதே வாழ்க்கை குறிக்கோள்!

இறைவனை அடைவதே வாழ்க்கை குறிக்கோள்!

திருப்பூர்: இறைவனை அடைவதே வாழ்க்கையின் குறிக்கோள், என, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் வீரபத்ரானந்தஜி மஹராஜ் பேசினார். விவேகானந்த சேவாலயம் சார்பில், தேசிய இளைஞர் தினவிழா, திருப்பூர் வேலாயுதசாமி மண்டபத்தில் நடந்தது. கேரளா, ஹரிபாட்டில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் வீரபத்ரானந்தஜி மஹராஜ் பேசியதாவது:மனித வாழ்க்கைக்கும், குறிக்கோளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. குறிக்கோள் இல்லாமல் மனிதன் வாழ்வதாக தோன்றினாலும், அவனது வாழ்க்கை நடவடிக்கையை கூர்ந்து பார்த்தால், குறிக்கோள் இருப்பது தெரியும். குறிக்கோளே வாழ்க்கையை உந்தி தள்ளுகிறது. குறிக்கோள் அற்ற மனிதர்களால், சமுதாயத்தில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்கள் ஓடுகிற ஆறாக இல்லாமல், சமுதாயத்தில் குட்டையாய் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்; கிருமிகளை உருவாக்கி, நோய்களை பரப்புகின்றனர். தன்னை சார்ந்தும், சமுதாயம் சார்ந்தும் குறிக்கோள் இருக்க வேண்டும். அதற்குபின், உயர்ந்த சிந்தனை இருக்க வேண்டும். துறவியின் குறிக்கோள் இறைவனை அடைவது; வாழ்க்கையின் குறிக்கோளும் இறைவனை அடைவதே. சத்தியத்தை ஆதாரமாக கொண்ட குறிக்கோள், சமுதாயத்தை வளப்படுத்துகிறது.

குறிக்கோள் இல்லையென்றால், சமுதாயத்தில் பரிணாம வளர்ச்சி இல்லை. பாமர மனிதன், பண்பாளனாக மாற வாய்ப்பில்லை. பண்புநிலை தெய்வமாக மாற வேண்டும். சமுதாயத்துக்காக தன்னை பயன்படுத்தும்போது, ஒருவன் தெய்வமாகிறான். எல்லையற்ற அன்பு, அறிவு, ஆற்றல், ஆனந்தம் இந்த நான்கும் வாழ்க்கையின் இயல்பாக, நியதியாக இருக்கிறது. நேசிப்பது இயல்பு. அன்பே சிவம், இல்லையென்றால் சவம். இதற்கு சாதகமான வாழ்க்கை முறை அமைந்தால், தெய்வநிலையை அடையலாம்.சிந்தனைக்கும், செயலுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது. கனவு காண்பதால் மட்டுமே கோட்டை கட்டிவிட முடியாது. கனவை நனவாக்க, திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புகழ் மட்டுமே குறிக்கோளாக இருந்தால், எந்த துறையிலும் சாதிக்கலாம். அதில், சமுதாய பலனும் இருக்க வேண்டும். குறிக்கோளை முழுமையாக விரும்பி, முழு வேகத்துடன் தொடர்ந்தால், வெற்றி இலக்கை அடைவது நிச்சயம். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !