திரவுபதி அம்மன் கோவில் நிலத்திற்கு பட்டா: அறநிலையத் துறை மனு!
மாமல்லபுரம்: உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, நிலத்திற்கு, பட்டா வழங்கக்கோரி, கூவத்துார் திரவுபதி அம்மன் கோவில் நிர்வாகம் மனு அளித்து உள்ளது. கூவத்துாரில், பொதுமக்கள் நலனுக்காக, வாரச் சந்தை நடத்த ஊராட்சி மன்றம் முடிவெடுத்தது. மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன், தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அருகில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வாரச் சந்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்காள அம்மன் கோவில் அருகில் வாரச் சந்தை நடத்தப்பட்டது. மறு வாரமும் வாரச் சந்தை நடத்த இருந்த நிலையில், அந்தப் பகுதியில் வாரச் சந்தை நடத்த, அங்காள அம்மன் கோவில் நிர்வாகம் தடைவிதித்தது.இதைத் தொடர்ந்து, செய்யூர் வட்டாட்சியர் ஏற்பாட்டின்படி, அதே மாதம் 18ம் தேதி, திரவுபதி அம்மன் கோவில் அருகில், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் வாரச்சந்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பூலோகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனு:தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், ஆடி மாத உற்சவம், துரியோதனன் படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த நிலத்தில் வாரச் சந்தை நடத்தினால், கோவில் விழாக்களை பாதிக்கும். எனவே, கோவில் நிலத்தில் வாரச்சந்தை நடத்தத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் பூலோகம் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கோவில் பயன்பாடு நிலத்திற்கு பட்ட வழங்க மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்கவும், எதிர்ப்பு இல்லாத பகுதியில் வாரச் சந்தை நடத்தவும், உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, கோவில் பயன்பாட்டு கிராம நத்தம் நிலத்திற்கு (புல எண்: 791 / 17ல், 68 சென்ட்) பட்டா வழங்கக் கோரி, கடந்த 6ம் தேதி, செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் மனு அளித்துள்ளார்.