உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமி அம்மன் சன்னதி திசை மாற்றம் திருப்பணி குழுவினர் விளக்கம்!

அபிராமி அம்மன் சன்னதி திசை மாற்றம் திருப்பணி குழுவினர் விளக்கம்!

திண்டுக்கல்: ஆகம விதிகளின் அடிப்படையிலும், வேத விற்பனர்களின் ஆலோசனைக்கு பின்புதான் அபிராமி அம்மன் சன்னதியின் திசையை மாற்றி அமைத்திருப்பதாக திருப்பணிக் குழு தலைவர் வேலுச்சாமி தெரிவித்தார். கும்பாபிஷேக திருப்பணிக்காக அபிராமி அம்மன் கோயில் புனரமைப்பு பணி கடந்த ஆண்டு ஜூனில் துவக்கப்பட்டது. தற்போதைய வடிவமைப்பில் அபிராமி அம்மன் சன்னதி, கிழக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் 150 ஆண்டுகளாக வடக்கு திசையில் அருள்பாலித்து வந்த அபிராமி அம்மன் சிலை தற்போது திசை மாற்றப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பணிக்குழு தலைவர் வேலுச்சாமி கூறியதாவது: ஆகம விதிகளின் அடிப்படையிலும், வேத விற்பனர்களின் ஆலோசனைக்கு பின்பே, அபிராமி அம்மன் சிலை ஆரம்ப கால தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் திசை மாற்றப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தற்போது ரூ. 20 கோடியாக அதிகரித்துள்ளது. நன்கொடையாக ரூ. 3 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்குழுவில் இடம் பெற்றவர்கள் மற்றும் நன்கொடை அளித்த ஜாதி சங்கங்களின் பெயர்களை கல்வெட்டில் பதிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !