சன்னாசிவரத பெருமாள் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
பெத்தநாயக்கன்பாளையம்: ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி கிராமத்தில், தை அமாவாசை முன்னிட்டு சன்னாசிவரத பெருமாள் கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம் யூனியன், தளவாய்பட்டி பகுதி மலை அடிவாரத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீஞாலகிரி சன்னாசி வரதன், வேணு கோபால் ஸ்வாமி கோவில்கள் உள்ளன. இங்கு, சித்தராக வாழ்ந்த சன்னாசி வரதன், "தை அமாவாசை நாளில் ஜீவசமாதி அடைந்தார். அதையடுத்து, பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஓலப்பாடி உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சன்னாசி வரதன், வேணுகோபால் ஸ்வாமிக்கு, கோவில் அமைத்து, தை அமாவாசை நாளில், தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர். அதன்படி, தை அமாவாசை தினமான நேற்று மாலை, 3 மணியளவில், சன்னாசி வரதன் ஸ்வாமி, வேணுகோபால் ஸ்வாமியின் இரண்டு தேர்களை, விழாக் குழுவினர், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, இரண்டு தேர்களும், பக்தர்களின், "கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தன. அப்போது, சன்னாசி வரதன், வேணுகோபால் ஸ்வாமி, ராதா, ருக்குமணி, கிருஷ்ணன், சிங்க முக ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட ஸ்வாமிகள், சிறப்பு புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், மல்லியக்கரை, தம்மம்பட்டி, ராசிபுரம், தலைவாசல், வீரகனூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.