அபிராமி அம்மன் கோயில் நிலைக்கல் அமைக்கும் பணி!
திண்டுக்கல்: அபிராமி அம்மன் கோயில் திருநிலைக்கால் அமைக்கும் பணி சிறப்பு பூஜையுடன் துவங்கியது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் திருப்பணி கடந்த ஆண்டு ஜூன் 21 ல் சிறப்பு யாகங்களுடன் துவங்கியது. சிற்பவேலைபாடுகளுடன் வடிவமைக்க பட்ட வரிக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட காளஹஸ்த்தீஸ்வரர், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மன் சன்னதிகள், ஒரே வரிசையில் கிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பகிரகங்களுடன் அமைக்கப்படும் பரிவார தெய்வங்களுக்காக சன்னதியின் மேற்கு திசையில் திருமாளிகை மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. கலை நுணுக்கங்களோடும் ராஜகோபுரத்தின் முதல் வரிச்சுற்று முழுமைபெற்றுள்ளது. திருப்பணியின் மிக முக்கிய நிகழ்வான திருநிலைக்கால் அமைக்கும் பணி, சிறப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. நவரத்தினங்கள், பஞ்சலோகங்களுக்கு மத்தியில் நிறுவப்படும் திருநிலைக்கால் பூஜையில் திருப்பணிக்குழு தலைவர் வேலுச்சாமி, வர்த்தக சங்க தலைவர் குப்புச்சாமி, நகராட்சி தலைவர் மருதராஜ், வர்த்தக சங்க துணை தலைவர் மேடா பாலன் உட்பட பலர் பங்கேற்றனர். திராளன பக்தர்கள் நிலைக்கல் பூஜையில் கலந்து கொண்டனர்.