திருக்கழுக்குன்றத்தில் 39வது திருக்குறள் விழா
திருக்கழுக்குன்றம் : குருபழநி ஆதீனம் திருக்குறள் பீடம் சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்கழுக்குன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மதுராந்தகத்தில் உள்ள குருகுலம் திருக்குறள் பீடம் சார்பில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகளை நடத்தி வருகிறது. 39வது ஆண்டாக, திருக்கழுக்குன்றம் உள்ள பு.தி.வ.ச., உயர்நிலைப் பள்ளியில், திருக்குறள் ஒப்புவித்தல் நேற்று முன்தினம் நடந்தது. எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பேச்சுப் போட்டியிலும், ஒன்பது, ௧௦ம் வகுப்பு மாணவர்கள் கட்டுரைப் போட்டியிலும், ௧௧, ௧௨ம், வகுப்பு மாணவர்கள், குறள் விளக்க ஓவியப் போட்டியிலும் கலந்து கொண்டனர். இதில் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள 12 பள்ளிகளிலிருந்து 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்பர் தொண்டர் அணியை சேர்ந்த நடேசர் நித்தியானந்தம், புலவர் சிவஅருள்மணி மற்றும் பலர் உடனிருந்து நடத்தினர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.இதேபோல், காஞ்சிபுரம் பு.தி.வ.ச., பள்ளியிலும், மதுராந்தகம் குருகுல பள்ளியிலும், நேற்று முன்தினம் போட்டிகள் நடத்தப்பட்டன.