திருப்பந்தியூர் பீமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பந்தியூர் : திருப்பந்தியூர் பீமேஸ்வரர் கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர். இங்கு, உலகநாயகி உடனுறை பீமேஸ்வரி அம்பிகா சமேத பீமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், இந்த கோவிலில், 10 ஆண்டுகளுக்குப் பின், எட்டு லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, இதன் கும்பாபிஷேகம், நேற்று, கோலாகலமாக நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 31ம் தேதி முதல், யாகசாலை பூஜைகள் துவங்கி, மூன்று நாட்களாக விசேஷ பூஜைகளும் நடந்தன. நேற்று, காலை, 8:30 மணி அளவில் கோபுர கலசங்களுக்கும், கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தன. இதில், திருப்பந்தியூரைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர்.முன்னதாக, கும்பாபிஷேக விழாவில் சென்னை, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர், ராஜா தலைமையில், திருவள்ளூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர், மோகன சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.