சீர்கேடு அடையும் குச்சனூர் சனீஸ்வரர் கோயில் சுரபிநதி!
சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் உள்ள சுரபிநதியில், பக்தர்கள் பரிகார துணிகளை விட்டுசெல்வதால், நதி மாசுபடுவதுடன் தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. திருநள்ளாருக்கு அடுத்ததாக, பிரசித்தி பெற்றது குச்சனூர் சனீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு, தமிழகம், பக்கத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது இக்கோயிலுக்கு திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு சனிக்கிழமையும், இதர நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோயில் எதிர் புறத்தில் செல்லும், சுரபி நதியில் பக்தர்கள் கை கால்களை சுத்தம்செய்தும், நீராடிவிட்டு கோயிலுக்குள் செல்ல வேண்டும். 10 அடி அகலம் மட்டுமே உள்ள இந்த நதி, இக்கோயிலின் அமைப்பிற்கே உரித்தான புனித நதியாக கருதப்படுகிறது. பரிகாரத்திற்காக வரும் பக்தர்கள், நதியில் குளித்துவிட்டு தங்களின் பழைய துணிகளை நதியில் விட்டுச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். பக்தர்கள், குளித்துவிட்டு தங்களது உடைகளையும், பரிகார துணிகளையும், பிற பொருள்களையும் அந்த நதியிலேயே விட்டுவிடுகின்றனர். இந்த துணிகளை சேகரிக்க, ஒப்பந்தம் எடுத்துள்ள நபர், அதில் புதிய துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பழைய துணிகளை அப்படியே நதியில் விட்டுவிடுகின்றனர்.இதனால் இந்த நதியில் துணிகள் தேங்கி, நதி சுகாதார சீர்கேட்டில் சிக்கிக் கொள்வதுடன், தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. கண்டுகொள்ளாத நிர்வாகம்: கோயிலில் பழைய துணிகளை எடுத்துக் கொள்வதற்கு, ஆண்டுதோறும் நிர்வாகத்தால் விடப்படும் ஒப்பந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகமாகி வருவாயை தருகிறது.ஆனால் கோயில் நிர்வாகம், பழைய துணிகளை முறைப்படுத்தி சுகாதாரத்தை காக்க, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கோயில் வளாகத்திலேயே கோயில் நிர்வாகத்தால் பெரிய தொட்டி வைத்து, ஆற்றில் துணிகளை விடக்கூடாது என அறிவுறுத்தினால், பக்தர்கள் பரிகார துணிகளை அதில் போட்டுச் செல்வர். ஒப்பந்தம் எடுக்கும் நபர்களிடம், விதிமுறைப்படி நதியில் போடப்படும் அனைத்து துணிகளையும் எடுத்துச் செல்லவும் கண்டிப்பு காட்டுவதில்லை. இதனால், இந்த பரிகார துணிகளால் நதியும், கோயில் வளாகமும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.