வாராது வந்த அமைச்சர்கள்: பசியில் வாடிய பக்தர்கள்!
சென்னை: அண்ணாதுரை நினைவு தினத்தை ஒட்டி, கோவில்களில் நடந்த சமபந்தி விருந்துக்கு, அமைச்சர்கள் தாமதமாக வந்ததால், சாப்பிட வந்தவர்கள், பசியால் தவித்தபடி காத்திருந்தனர். அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, முக்கிய கோவில்களில், சமபந்தி விருந்து நடக்கும் என, அரசு அறிவித்தது.சென்னையில், 31 கோவில்களில், அமைச்சர்களும், மூன்று கோவில்களில், சபாநாயகர், துணை சபாநாயகர், மேயர், ஆகியோர் கலந்து கொள்வர் என, அறிவிக்கப்பட்டது.
சமபந்திக்கு பிந்து: எனவே, கோவில் நிர்வாகிகள், விருந்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். பகல், 12:00 மணிக்கு, உணவு தயாரானது; பகல், 1:00 மணிக்கு, விருந்து சாப்பிட பக்தர்கள் திரண்டனர். ஆனால், கோவில் அதிகாரிகள், அமைச்சர் வந்த பிறகு தான், உணவு பரிமாறுவோம் என்றனர்.சாப்பிட வந்தவர்கள், வேறு வழியின்றி, அமைச்சர்களின் வருகைக்காக காத்திருந்தனர். நேற்று, சட்டசபை நடந்ததால், அமைச்சர்களால் உரிய நேரத்திற்கு வர இயலவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்ததால், சாப்பிட வந்தவர்கள் பசியில் துடித்தனர்.சிலர் உணவு வேண்டாம் எனக் கூறி, புறப்பட்டு சென்றனர். சிலர் அதிகாரி களிடம், வாக்குவாதம் செய்தனர். அவர்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். பிற்பகல், 2:25 மணிக்கு, சட்டசபை முடிந்தது.
மந்திரிகளுக்கு வாழ்த்து: அதன் பின், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர், கோவிலுக்கு விரைந்தனர். பெரும்பாலான கோவில்களில், 2:55 மணிக்கு, உணவு பரிமாறப்பட்டது. விருந்து சாப்பிட வந்தோர், அமைச்சர்களையும், அதிகாரிகளையும், திட்டியபடி சாப்பிட்டுச் சென்றனர். காலதாமதம் ஏற்படும் என தெரிந்திருந்தால், விருந்தை துவக்கும்படி, அமைச்சர்கள் கூறியிருக்கலாம் என, விருந்திற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.