சேளூர் காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ப.வேலூர்: சேளூர் காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ப.வேலூர் அடுத்த சேளூரில், விநாயகர், காளியம்மன், மாரியம்மன், மாதேஸ்வர ஸ்வாமி, மலையாள ஸ்வாமி மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். இக்கோவில் திருப்பணி, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த, 29ம் தேதி, கிராம சாந்தியுடன், நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தீபாராதனையும் நடந்தது. கடந்த, 1ம் தேதி காவிரி ஆற்றுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடி கோ, கஜ மற்றும் அஷ்ட பூஜை செய்து, தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். நேற்று முன்தினம், விநாயகர் வழிபாடு, இரண்டாம் காலயாக பூஜை, கோபுர கலசம் தர்பணம், அஷ்டபந்தனம், மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, பிம்பசுத்தி, நான்காம் கால யாக பூஜையும், 8 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 9.15 மணிக்கு பரிவார தெய்வங்களுடன் கூடிய விநாயகர், காளியம்மன், மாரியம்மன், மாதேஸ்வர ஸ்வாமி மற்றும் மலையாளி ஸ்வாமி ஆகிய கோவில்களுக்கு, மகா கும்பாபிஹேஷக விழா கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. ப.வேலூர், சேளூர், பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பொன்மலர்பாளையம் உள்ளிட்ட சுற்று ட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா கந்தசாமி, விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.