நவதிருப்பதி கோயில்களுக்கு செல்லும் ரோடுகள்: ரூ.8.5 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த நவ திருப்பதி கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சென்று வரும் ரோடுகளை புதுப்பிக்க 8.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பூலோகத்தில் வைகுண்டம் என்ற பெயர் பெற்ற ஸ்ரீ வைகுண்டம் பகுதியை சுற்றிலும் நவ திருப்பதி கோயில்கள் உள்ளன. இங்கு நவத்திருப்பதிகளான ஸ்ரீவைகுண்டம், கள்ளர்பிரான், நத்தம், எம்மிடர்கடிவான், திருப்புளியங்குடி, காய்சினவேந்த பெருமாள், பெருங்குளம், மாயக்கூத்தர், இரட்டைதிருப்பதி, தேவர்பிரான், தொலவில்லிமங்கலம், செந்தாமரைக்கண்ணன்,தென்திருப்பேரை,நிகரில் முகில்வண்ணன்,திருக்கோளூர், வைத்தமாநதி, ஆழ்வார்திருநகரி,பொலிந்து நின்ற பிரான், ஒன்பது கோயில்களிலும் வெவ்வேறு அவதாரங்களில் பெருமாள் அருள் பாலித்து வருகிறார். இந்த கோயில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு ரோடுகள் குண்டும், குழியுமாக இருந்தது. பக்தர்கள் இந்த ரோட்டை சீரமைக்க கோரி வலியுறுத்தினர். நவ திருப்பதி கோயில்களுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனை சீரமைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கலெக்டர் ரவிக்குமார் கூறுகையில்,""நவ திருப்பதி கோயில்களுக்கு செல்லும் 10 ரோடுகள் இணைத்து, 28 கி.மீ., தூரமுள்ள ரோடுகளை புதுப்பிக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 8.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் பணிகள் துவங்கும். பணிகள் முடிந்த பின்பு இந்த ரோடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பு செய்வார்கள். பக்தர்கள் எளிதில் நவ திருப்பதி கோயிலுக்கு செல்லும் வகையில் விரைவில் பணிகள் முடிக்கப்படும், என்றார்.